மூன்று மொழி கொள்கையில் தோற்று விட்டதால், அதை மறைக்கவே தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் பேசிகிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நாடாளுமன்றம், சட்டப்பேரவை தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். மக்களவையில் 543 இடங்கள் உள்ள நிலையில், சீரமைப்புக்குப் பிறகு அந்த எண்ணிக்கை 800-ஆக அதிகரிக்கும் என்றும், தமிழகத்துக்கு 22 இடங்கள் கிடைப்பதற்குப் பதிலாக 10 இடங்கள்தான் கிடைக்கும் என்று யாரோ முதல்வரிடம் கூறியுள்ளனர். மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு என்று எங்கும் தெரிவிக்காத நிலையில், எந்த அடிப்படையில் முதல்வர் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசியுள்ளார்?
ஏற்கெனவே, இது தொடர்பாக காங்கிரஸ் புரளி பரப்புகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழக அரசு மூன்று மொழிக் கொள்கை விவகாரத்தில் தோற்றுவிட்டனர். அதை மறைக்கவே தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் பேசி வருகிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். பொதுமக்களிடம் முதல்வர் அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது. 2001-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைத்தார். மறுசீரமைப்பை தவிர்க்க முடியாது. அதேநேரத்தில், தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாமல் செயல்படுத்த வேண்டியது எங்கள் பொறுப்பு. முதல்வர் தனக்கு தொகுதி மறுசீரமைப்பு குறித்து யார் தகவல் கூறியது என்று தெரிவித்தால் மட்டுமே, அனைத்து கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்கும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
பாலியல் குற்றங்கள்... தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பள்ளிகளில் நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த அமைப்புக்களை கலைத்திருக்கிறது என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் திட்டம் நிறுத்தப்பட்டு, இதற்கான வாகனங்கள் மூலையில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அரசுப் பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. ஒட்டுமொத்தமாக அரசுப் பள்ளிகளின் செயல்பாட்டை முடக்குவதுதான் திமுகவின் நோக்கமாக இருக்கிறது.
தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும்போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் விளம்பர மோகத்தில் திரிந்து கொண்டிருக்கிறார். அமைச்சராக நீடிக்க இவருக்கு தார்மீக உரிமை இல்லை. உடனடியாக அனைத்துப் பள்ளிகளிலும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதுபோல உளவியல் மையங்களை அமைக்க வேண்டும். பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் தடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.