கோவை: “தமிழ் நம்முடைய உயிர். அதை வைத்து பிழைப்பு நடத்த வேண்டும் என்று யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோவை, ராம்நகர் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், ரூ.3 லட்சம் செலவில் உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (பிப்.25) நடந்தது. பாஜக தேசிய மளிரிணி தலைவர், கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: “வானதி சீனிவாசன் பொறுப்பேற்ற நாள் முதல் தனது தொகுதியை முதல் நிலை சட்டமன்ற தொகுதியாக மாற்ற வேண்டும் என்ற முயற்சிகளில் இறங்கி பல்வேறு திட்டங்களை தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செலவிட்டு செயல்படுத்தி வருகிறார். கல்வித்துறை அமைச்சரும் முதல்வரும் புதிய திட்டங்களை செயல்படுத்தும் முன் எளிய முறையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
தனியார் பள்ளிகளை போல் அரசு பள்ளிகளில் தரமான கல்வி மற்றும் இதர பயிற்சியை ஏன் அரசால் வழங்க முடிவதில்லை?. தமிழ் நம்முடைய உயிர். தமிழை ஒழிப்பதற்கு எவ்வளவு பெரிய கொம்பன் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதே நேரத்தில் தமிழை வைத்து பிழைப்பு நடத்த வேண்டும் என்று யார் வந்தாலும் அதையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்,” என்று அவர் கூறினார்.