மதுரை: தூத்துக்குடியில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்களை கைது செய்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும், காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலாளர் பெ.சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஜாக்டோ ஜியோ முடிவின்படி தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளில் ஒன்றான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 14-ல் தமிழகம் முழுவதும் வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 2-வது கட்டமாக இன்று மாவட்ட தலைநகரங்களில் மறியல் நடத்த திட்டமிடப்பட்டது. தமிழக அரசு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை நேற்று அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த உத்தரவாதமும் தராததால் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆட்சியர் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றவர்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தடுத்து நிறுத்தி, மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளருமான மயில் உள்ளிட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 19 (1)(சி)க்கு புறம்பாக ஜனநாயக உரிமைகளை மதிக்காமல், அறவழியில் போராட்டம் நடத்தியவர்களை ஆட்சியர் வளாகம் என்பது அரசு ஊழியர்களுக்கான வளாகம், ஆசிரியர்களுக்கான வளாகம் அல்ல என எச்சரித்து கைது செய்துள்ளனர்.
இதனை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். ஜனநாயக முறைப்படி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு புறம்பாக கைது செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தூத்துக்குடி காவல்துறை நிர்வாகம் நிபந்தனையின்றி கைது செய்த ஆசிரியர், அரசு ஊழியர்களை விடுவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஜாக்டோ ஜியோவோடு இணைந்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்.
மேலும், தமிழக முதல்வர் அரசியலமைப்புச் சட்டத்துக்கு புறம்பாக கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறை அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.