தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: மதுரையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 


மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: தமிழக முதல்வர் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி இன்று அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழக முதல்வர் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கொ.சின்னப்பொன்னு தலைமை வகித்தார்.

இதனை தமிழ்நாடு வருவாய்த்துறை பதவி உயர்வு பெற்ற அலுவலர் சங்க பொதுச்செயலாளர் ஜெயகணேஷ் துவக்கி வைத்தார். அரசு ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் நிறைவுரை ஆற்றினார். இதில் மாவட்டச் செயலாளர் சு.மணிகண்டன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

இதில் கிராம சுகாதார செவிலியர் சங்கம் மாநிலச் செயலாளர் பிரேமா ஆனந்தி, பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி அலுவலர் சங்க பொதுச்செயலாளர் மனோகரன், வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில துணைத் தலைவர் சு.மாரியப்பன், சாலைப் பராமரிப்பு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மாரி, கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட நிர்வாகி முருகைய்யன், சுகாதார போக்குவரத்துத் துறை மாவட்ட பொறுப்பாளர் கணேசன், ஐசிடிஎஸ் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மேனகா, சத்துணவு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் நூர்ஜகான், மாவட்டப் பொருளாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் பேசினர். முடிவில் மாவட்டப் பொருளாளர் சோ.கல்யாண சுந்தரம் நன்றி கூறினார். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

x