பல்லாவரம்: பல்லாவரத்தில் மத்திய அரசின் இந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் இந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு (FSO-TN) என்னும் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக போன்ற முன்னணி கட்சியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கையில் விளம்பர பதாகைகளுடன் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராகவும், இந்தி மொழி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அவர்கள் கையில் வைத்திருந்த விளம்பர பதாகையில், தமிழ் வெல்லட்டும், தமிழ் மொழி வாழ்க, வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும், இந்தி தெரியாது போடா போன்ற வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன. பல்லாவரம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு யு.ஜி.சி. வரைவுக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும், மும்மொழிக் கொள்கையை திணிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.