ராமநாதபுரம்: ஏர்வாடி ஊராட்சியில் விவசாயப் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடையை திறக்கக் கூடாது என 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி தேவேந்திரர் நகரைச் சேர்ந்த 50 பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்ற பெண் கூறியதாவது: ஏர்வாடி ஊராட்சியில் காவல் நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை, தற்போது கொம்பூதி வழியாக ராமநாதபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் விவசாயப் பகுதியில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடத்துக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளனர்.
இதன் அருகே பெண்கள் குளிக்கும் குளம் உள்ளது. மேலும் பெண்கள் விறகு வெட்ட, களை எடுக்க, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். இங்கு டாஸ்மாக் கடையை அமைத்தால் பெண்கள் விவசாயப் பணிக்குச் செல்ல அச்சப்படுவார்கள்.
எனவே, இங்கு டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கக் கூடாது என ஏற்கெனவே ஆட்சியரிடம் 4 முறை மனு அளித்துள்ளோம். இப்போது மீண்டும் இப்பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. இதை ஆட்சியர் அனுமதிக்கக் கூடாது என்று கூறினார்.