பூட்டிய வீடுகளில் தொடர் திருட்டு: சிவகங்கை மாவட்ட மக்கள் அச்சம்


சிவகங்கை: பூட்டிய வீடுகளில் தொடர் திருட்டு நடைபெற்று வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருப்பத்தூர் அருகே ப.கருங்குளத்தைச் சேர்ந்த நாச்சியப்பனின் பூட்டிய வீட்டில் பிப்ரவரி 21-ம் தேதி இரவு 2 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருடுபோயின. இதேபோல், வைரவன் என்பவரது பூட்டிய வீட்டில் 2 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.20,000 திருடுபோயின. இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தேவகோட்டை வள்ளியப்பச் செட்டியார் வடக்கு வீதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சீதா லெட்சுமியின் பூட்டிய வீட்டில் பிப்ரவரி 23-ம் தேதி பட்டப்பகலில் 40 பவுன் நகைகள், ரூ.2.5 லட்சம் திருடுபோயின. இதேபோல், ஞானாநந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜாமணி என்பவரது பூட்டிய வீட்டிலும் பட்டப்பகலில் 16 பவுன் நகைகள், ரூ.15,000 திருடுபோயின. இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தேவகோட்டை திருட்டுச் சம்பவங்களில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் பகலில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருடியது சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்தது. ப.கருங்குளத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், தடயங்கள் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் ஆசிரியர் காய்கறி வாங்கச் சென்ற சிறிது நேரத்திலேயே திருட்டு நடந்துள்ளது.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் இருக்கும் போதே அச்சமின்றி வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர் திருட்டால் வீட்டை பூட்டிவிட்டு சிறிது நேரம் வெளியே செல்லக்கூட மக்கள் அச்சப்படும் நிலை நிலவுகிறது. இதனால், குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதோடு, இரவு மட்டுமின்றி பகலிலும் போலீஸார் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்,‘குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றப்பிரிவு போலீஸார் மூலம் கண்காணிப்புப் பணியையும் தீவிப்படுத்தியுள்ளோம்’ என்றனர்.

x