புதுச்சேரி: டெபாசிட் வாங்க மாட்டேன் என சொல்லும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, என்னை எதிர்த்து போட்டியிட தயாரா என்று பேரவைத்தலைவர் செல்வம் சவால் விட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பேரவைத் தலைவர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''தவளக்குப்பம் சிறுமி பாலியல் பாதிப்பு தொடர்பான வழக்கு போக்சோவுக்கு மாற்றப்பட்டு சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் ஆசிரியர் சிறையில் உள்ளார். சிறுமி தரப்பில் புகார் தரப்படவில்லை. சிறுமி பாதிப்பு தொடர்பாக ஜிப்மரில் பரிசோதனை நடந்தது. மாநில காவல்துறை மீது நம்பிக்கை இல்லாவிட்டால் முதல்வர், ஆளுநரிடம் கலந்து பேசி சிபிஐக்கு இவ்வழக்கை மாற்ற எங்களுக்கு எவ்வித தடை ஏதுமில்லை. பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் கிடைக்கவேண்டும்.
விஜய் அரசியல் கட்சித்தலைவர்களை ஆண்டு விழாவுக்கு கூப்பிடலாம். வாழும் காமராஜரான ரங்கசாமி ஆசி பெற்றுதான் கட்சியை விஜய் ஆரம்பித்தார். தமிழகத்துக்கு விரிவுப்படுத்துவதால் அவரை அழைத்திருக்கலாம். விஜய் விழாவுக்கு முதல்வர் செல்கிறாரா என்பது அவரிடம்தான் கேட்கவேண்டும். தேசிய ஜனநாயக்க கூட்டணி முதல்வர் வேட்பாளர் ரங்கசாமிதான்.அதில் மாறுதல் ஏதுமில்லை. விஜய் இக்கூட்டணியில் வருவாரா என கேட்கிறீர்கள், இன்று இருக்கும் கூட்டணியில் நீடிக்கிறது. கூட்டணி மாறினால் தேசிய தலைமைதான் முடிவு செய்யும். கூட்டணி மாற வாய்ப்பில்லை.
கடந்த ஆட்சியில் செயல்படாத திட்டங்களையும் தற்போது செயல்படுத்துகிறோம். நான் டெபாசிட் வாங்கமாட்டேன் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி சொல்கிறார். என்னை எதிர்த்து போட்டியிட தயாரா- சவால் விடுகிறேன்- அவரது சொந்த ஊரில் நாராயணசாமி போட்டியிடுவதில்லை. மணவெளி தொகுதியில் போட்டியிட நான்தயார்- நாராயணசாமி தயாரா அவரது ஊரில் நான் வென்றுள்ளேன். வேண்டுமானால் அவர் என்னை எதிர்த்து போட்டியிடலாம்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 11.5 கோடியில் கேபிள் மின் இணைப்பு என் தொகுதியில் போட்டார்கள். அந்த கேபிள் பயன்பாட்டுக்கு வரவில்லை- அதில் ஊழல் நடந்துள்ளது. சிபிஐ விசாரணை தேவை என கோரினேன். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழலை வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன். முதல்வர் அனுமதித்தால் இதை செய்ய தயார். கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 120 கோடிக்கு பணிகள் என் தொகுதியில் நடந்துள்ளது.
காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம் மக்களவையில் புதுவைக்காக எத்தனை முறை பேசி, என்ன திட்டம் கொண்டு வந்தார் என தெரிவிக்கவேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகள் தொடங்கி தற்போதுவரை அவர்தான் எம்.பி.யாகவுள்ளார். டெல்லி சென்று மத்திய மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து இலங்கையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி எம்பி வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி கோரினர். ஆனால் அவர்களை இலங்கையில் 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க முதல்வர் ரங்கசாமிதான் நடவடிக்கை எடுத்து வருகிறார்'' என்றார்.
தேசிய ஜனநாயகக்கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் ரங்கசாமி என கூறுகிறீர்கள் அவர் அதுபோல் கூறவில்லை- பாஜக எம்எல்ஏக்கள் சிலரும் எதிர்க்கிறார்களே என்று கேட்டதற்கு, ''நாங்கள் தேசியக்கட்சி. நாங்கள் சொல்வதுதான் உண்மை. எங்களை மீறி செல்ல மாட்டார். முதல்வர் வேட்பாளர் ரங்கசாமிதான். முதல்வர் எப்போதும் தேர்தல் சமயத்தில்பார்க்கலாம். எம்எல்ஏக்கள் கருத்து கேட்டு கூட்டணி பற்றி முடிவு எடுப்பதில்லை. கட்சி தலைமைதான் பேசி கூட்டணியை முடிவு எடுக்கும்." என்றார்.