கரூர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, கரூர் சட்டப்பேரவைத் தொகுதி பொதுமக்களுக்கு மாவட்ட திமுக சார்பில் மூடியுடன் கூடிய சில்வர் அண்டா பரிசாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்ட திமுக சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள், பொதுமக்களுக்கு குதிரை ரேக்ளா, மாட்டு வண்டி எல்கை பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட 88 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாவட்ட திமுக சார்பில் மூடியுடன் கூடிய சில்வர் அண்டாக்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியை தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதுவரை கரூர் வடக்கு பசுபதி பாளையம், மக்கள் பாதை, கோடங்கிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்த சில்வர் அண்டாக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, தாந்தோணிமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் மொத்தமாக வைக்கப்பட்டுள்ள சில்வர் அண்டாக்கள், அங்கிருந்து சரக்கு வாகனங்கள் மூலம் கரூர் தொகுதியின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
அங்கு, ரேஷன் கடைகள் வாரியாக ரேஷன் கார்டு தாரர்கள் கணக்கிடப்பட்டு, அண்டாக்கள் விநியோகிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு உதயநிதி பிறந்த நாளையொட்டி, 3 சில்வர் சம்படங்கள் (டப்பாக்கள்) வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.