திருச்சி அதிமுக நிர்வாகி ராஜினாமா: மாநகர் மாவட்டச் செயலாளர் மீது குற்றச்சாட்டு


சுரேஷ் குப்தா

திருச்சி: அதிமுகவில் திருச்சி மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் உண்மை விசுவாசிகளை புறக்கணித்துவிட்டு, தனது உறவினர்களுக்கு பதவி வழங்குவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் காந்தி மார்க்கெட் பகுதி செயலாளராக இருந்தவர் சுரேஷ் குப்தா. இவர், அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன், கட்சியில் உண்மை விசுவாசிகளை புறக்கணித்துவிட்டு, தனது உறவினர்களுக்கும், தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பதவிகளை வழங்கி வருகிறார். காந்தி மார்க்கெட் பகுதி செயலாளராக இருந்த என்னை எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக நியமித்ததுடன், அந்தப் பகுதியை சுக்குநூறாக உடைத்து அவரது உறவினர்களுக்கு பதவி வழங்கியுள்ளார். மேலும், பட்டியலின நிர்வாகிகள் ராஜா, அழகரசன் விஜய் ஆகியோரையும் பதவியிலிருந்து நீக்கினார்.

எனவே, அவர் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருக்கும் வரை நான் எனது அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகி, தொண்டனாக மட்டும் பணியாற்றுவேன். மேலும், அவர் தனக்கு எதிராக தானே போஸ்டர்களை அடித்து ஒட்டிக் கொண்டு, அந்தப் பழியை என் மீது சுமத்தினார். இது தொடர்பாக நான் அவரிடம் கேட்டபோது, பட்டியலினத்தைச் சேர்ந்த என்னை சாதிப் பெயரைச் சொல்லி திட்டினார். இது தொடர்பாக கட்சித் தலைமைக்கும் புகார் மனு அனுப்பியுள்ளேன் என்றார்.

இதுகுறித்து திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசனிடம் கேட்டபோது, ‘‘நான் சாதி ரீதியாக செயல்படுவதாக அவர் கூறுவது அபாண்டம். என்னைப் பற்றி அறிந்தவர்களுக்கு இது நன்றாக தெரியும். இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கவனத்துக்கு கொண்டு செல்வேன்’’ என்றார்.

x