புதுச்சேரி - கெங்கராம்பாளையத்தில் சுங்கக் கட்டணம் வசூல் தொடக்கம்: பொதுமக்கள் எதிர்ப்பு


புதுச்சேரி: விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கெங்கராம்பாளையத்தில் மக்கள் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்ட சுங்கக் கட்டணம் வசூல் நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. ‘சர்வீ்ஸ் சாலை அமைக்கப்படவில்லை. சுங்க அலுவலகத்தில் மேற்கூரையில்லை’ என மக்கள் அடுக்கடுக்காக புகார் தெரிவித்தனர். சுங்கம் வசூலிப்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் - புதுச்சேரி வழியாக நாகப்பட்டினத்துக்கு 194 கிமீ அளவில் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் புதுச்சேரி - விழுப்புரம் இடையிலான தொலைவு 40 கிமீக்குள் இருக்கும். இப்பகுதிக்குள் சுங்கக் கட்டண வசூல் மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு மிக குறைந்த தொலைவுதான் உள்ளது. இப்பகுதியில் அதிகளவு கிராமங்கள் உள்ளன. எனவே இங்கு சுங்கக் கட்டண வசூலிப்பு மையம் அமைக்க வேண்டாம் என்று மக்கள் தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையே கடந்த ஜனவரியில் விழுப்புரம் - புதுச்சேரி இடையே உள்ள கெங்கராம்பாளையத்தில் சுங்கக் கட்டணம் வசூலிக்க அறிவிப்பு வெளியிடப்பட்து. ஆனால், பணிகள் முடிவடையாமல் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு கிளம்பியதால் சுங்க வசூல் மையம் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கெங்கராம்பாளையத்தில். ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த பகுதியில் நேற்று முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்காக நேற்று காலை , ஹோமம் நடத்தி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுங்கக் கட்டண வசூல் மையம் செயல்படத் தொடங்கியது. இத்தகவல் அறிந்து உள்ளூர் மக்கள் அங்கு வந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘உள்ளூர் மக்களுக்கு அலுவலகத்தில் சுங்கக் கட்டணத்தில் தளர்வு அளிக்கும் பாஸ்கள் வழங்கப்படுகின்றன. அதை பெற்றுக் கொள்ளலாம்’ என்று அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையே தொடக்கத்தில் சிக்னல்கள் சிறிது நேரம் சரியாக வேலை செய்யவில்லை. அங்கு பணியில் இருந்தோரின் மொழி பிரச்சினையாலும் குழப்பம் நிலவியது. அதன் பிறகு நிலைமை சீரானது.

இந்த சுங்க வசூலிப்பு மையத்தில் கார்கள் ஒருமுறை செல்ல ரூ.60 (ஒரே நாளில் இருமுறை செல்ல ரூ.90), இலகுரக வணிக வாகனங்கள் செல்ல ரூ.95 (ஒரே நாளில் இரண்டு முறை செல்ல ரூ.145), இரண்டு அச்சுகள் கொண்ட பேருந்துகள் மற்றும் டிரக் செல்ல ரூ.200 (ஒரே நாளில் இரு முறை செல்ல ரூ. 305), மூன்று அச்சுக்கள் கொண்ட வணிக வாகனங்கள் செல்ல ரூ.220 (ஒரே நாளில் இரு முறை செல்ல ரூ. 330) பல அச்சுகள் கொண்ட கனரக கட்டுமான வாகனங்கள், மண் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் செல்ல ரூ.315 (ஒரே நாளில் இரு முறை செல்ல ரூ.475) வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கடும் குற்றச்சாட்டு: பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், “புதிய சுங்கச் சாவடியில் மேற்கூரையே இல்லை. தடுப்பு அமைத்து வசூலை தொடங்கி விட்டனர். கழிப்பறை, ஓய்வறை, முதலுதவி மையம் என எதுவும் இல்லை. திருபுவனையில் சர்வீஸ் சாலை சரியாக இல்லை. திருவண்டார்கோயில் பகுதியில் உணவு கிடங்கு, பள்ளிக்குச் செல்ல தனியாக பாதை அமைக்கவில்லை. பல இடங்களில் சர்வீஸ் சாலையை முடிக்கவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பணம் வசூலிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். இது தவறான போக்கு. புதுச்சேரி அரசு இதில் தலையிட வேண்டும்" என்று தெரிவித்தனர்.

x