கடலூர்: மதுகுடிக்க பணம் தராத ஆத்திரத்தில் தாயை அடித்துக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை


கடலூர்: நெய்வேலி பூம்புகார் சாலையைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி பவுனம்மாள். இவர்களது மகன் தேவன்ராஜ் (42). கூலித் தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தார். அவ்வப்போது தனது தாயார் பவுனம்மாளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.

கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி அன்று மது குடிக்க பணம் கேட்டுள்ளார். பவுனம்மாள் பணம் தர மறுத்துள்ளார். ஆத்திரம் அடைந்த தேவன் ராஜ் பவுனம்மாளை கட்டையால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நெய்வேலி தெர்மல் போலீஸார் தேவன்ராஜை கைது செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி லட்சுமி ரமேஷ் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார். இதில், தேவன் ராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் வளர்மதி ஆஜரானார்.

x