சிதம்பரம் அருகே வீட்டு தோட்டத்தில் புகுந்த முதலை: பாதுகாப்பாக மீட்டது வனத்துறை!


சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டை தோப்புத்தெருவில் வசித்து வருபவர் சம்மந்த மூர்த்தி (42). நேற்று முன்தினம் இவரது வீட்டுத் தோட்டத்தில் முதலை ஒன்று புகுந்தது.

இதைப் பார்த்த அவர் சிதம்பரம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தந்தார். இதையடுத்து சிதம்பரம் வனச்சரக அலுவலர் வசந்த் பாஸ்கர் தலைமையில் சிதம்பரம் பிரிவு வனவர் பன்னீர்செல்வம், வனக்காப்பாளர் அன்புமணி, வன ஊழியர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் சுமார் 13 அடி நீளமுள்ள 550 கிலோ கொண்ட முதலையை பிடித்து பாதுகாப்பாக எடுத்துச் சென்று சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குளத்தில் விட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “பழைய கொள்ளிடம், கான்சாகிப் வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளில் முதலைகள் அதிக அளவில் உள்ளன. இரைக்காக முதலைகள் நீர்நிலைகளை விட்டு வெளியே வந்து விடுகின்றன. இது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை தடுக்கும் வகையில் இப்பகுதியில் முதலைப் பண்ணை அமைக்க வேண்டும்” என்றனர்.

x