மதுரை: பொன். மாணிக்கவேல் போன்ற ஓய்வுபெற்ற அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து விசாரிப்பது சரியா? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஓய்வுபெற்ற டி.எஸ்பி காதர் பாட்ஷா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் ஐ.ஜி.யாக இருந்த பொன்.மாணிக்கவேல், சிலைக் கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைக்க, அவருடன் கூட்டுசேர்ந்து செயல்பட்டார். அதற்கு இடையூறாக இருந்த என்னை பழிவாங்கும் நோக்கில், எனக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்தார்.
இதனால், பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அளித்த மனு மீது உள்துறைச் செயலர், டிஜிபி நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பொன்.மாணிக்கவேல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதையடுத்து, சிபிஐ முதல்கட்ட விசாரணையை நடத்தி அவர் மீது வழக்கும் பதிவு செய்தது.
இந்த வழக்கில், மதுரை மாவட்ட கூடுதல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 2024 ஆகஸ்ட் மாதம் சிபிஐ தாக்கல் செய்த முதல்கட்ட விசாரணை அறிக்கை நகல் கேட்டு, பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை ரத்து செய்து, சிபிஐ முதல்கட்ட விசாரணை அறிக்கை நகல் வழங்க உத்தரவிடக் கோரி, பொன்.மாணிக்கவேல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: பொன்.மாணிக்கவேல் போன்ற ஓய்வுபெற்ற காவல் துறை உயர் அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்து, கைது செய்து விசாரிப்பது சரியா? ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மீது இதுபோன்று வழக்குகள் பதிவு செய்தால், இனிவரும் காலங்களில் முக்கிய வழக்குகளை விசாரிக்க, காவல் துறை உயர் அதிகாரிகள் எவ்வாறு முன்வருவர்?
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல், உயர் நீதிமன்ற கண்காணிப்பிலேயே வழக்கு விசாரணையை நடத்தி வந்தார். பொன்.மாணிக்கவேல் மீதான வழக்கின் விசாரணையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? எனவே, மனுதாரர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பு நடத்திய பூர்வாங்க விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறினார்.