விடுமுறைக்காக பெங்களூருவில் வசிக்கும் தாய்வழி தாத்தா, பாட்டி வீட்டுக்கு சென்றபோது, 9-ம் வகுப்பு பயிலும் பேத்தியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தாத்தா மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த சித்தி மீது உதகை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் முறையாக விசாரணை நடத்தி 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள உறைவிடப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி, தனது தாயார் இறந்து விட்டதால் தந்தையின் பராமரிப்பில் வசித்து வருகிறார். பள்ளி விடுமுறை நாட்களில் தாயாரின் பெற்றோரான பெங்களூருவி்ல் வசிக்கும் தாத்தா, பாட்டியின் வீட்டுக்கு செல்வது வழக்கம். கடந்த டிச.4-ம் தேதி பெங்களூரு சென்றபோது தனது பேத்தியான அந்த மாணவியை தாத்தா மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு அந்த மாணவியின் சி்த்தியும் உடந்தையாக இருந்துள்ளார்.
பின்னர் பேத்தியின் மொபைல் போனில் இருந்த தனிப்பட்ட சில புகைப்படங்களை தனது மொபைலுக்கு மாற்றிக்கொண்ட தாத்தா, நடந்த சம்பவங்களை வெளியே வேறு யாரிடமும் கூறக்கூடாது என பேத்தியை மிரட்டியுள்ளார். இதனால் தனக்கு நேர்ந்த துயரத்தை அந்த மாணவி தனது பாட்டியிடம் கூறவில்லை. ஒரு கட்டத்தில் தாத்தா மற்றும் அந்த வீட்டில் இருந்த சித்தியின் துன்புறுத்தல் அதிகரிக்கவே இதுகுறித்து தனது தந்தைக்கு தெரிவித்துள்ளார். இதனால் தனது பேத்தியை அடித்து துன்புறுத்தி உதகைக்கு அனுப்பி வைக்க தாத்தா மறுத்துள்ளார்.
இதையறிந்த மாணவியின் தந்தை கடந்த ஜன.4 அன்று பெங்களூரு போலீஸாரின் உதவியுடன் அந்த வீட்டுக்கு சென்று உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் இருந்த தனது மகளை மீட்டு, உதகைக்கு அழைத்து வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த தாத்தா, தனது பேத்தியின் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படங்களை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் உதகை அனைத்து மகளிர் போலீஸார் பாதிக்கப்பட்ட மாணவியின் தாத்தா மற்றும் சித்தி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் பாலியல் சம்பவம் பெங்களூருவில் நடந்தது என்பதால் அதுதொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரம் தங்களுக்கு இல்லை எனக்கூறி உதகை மகளிர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்.
போலீஸாரி்ன் இந்த அறிக்கையை ரத்து செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜ ரத்தினம் ஆஜராகி, "பாலியல் சம்பவம் பெங்களூருவில் நடந்து இருந்தாலும், மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படங்களை அந்த மைனர் பெண் உதகைக்கு வந்த பிறகே அந்தப் பெண்ணின் தாத்தா உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பரப்பியுள்ளார். எனவே, இந்த பாலியல் சம்பவம் குறித்து விசாரிக்க உதகை போலீஸாருக்கும் அதிகாரம் உள்ளது" என வாதிட்டார்.
அதையேற்ற நீதிபதி, "இந்த சம்பவம் தொடர்பாக நீலகிரி மகளிர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி உதகை போலீஸார் பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி வாக்குமூலம் பெற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரிக்க உதகை போலீஸாருக்கு முழு அதிகாரம் உள்ளது. எனவே, இந்த வழக்கை போலீஸார் முறையாக விசாரித்து 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கையை உதகை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார்.