கோவை: வெள்ளியங்கிரி மலையில் ஏற்றப்பட்ட தமிழக வெற்றிக் கழக கொடியை வனத்துறையினர் அகற்றினர்.
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி பகுதியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. மகா சிவாராத்திரியை முன்னிட்டு, கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் 7-வது மலை உச்சியில் சுயம்பு லிங்கமாக உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை பக்தர்கள் மலை ஏறி தரிசித்து வருகின்றனர்.
இந்நிலையில், தவெக தொண்டர் ஒருவர் 7-வது மலையில் கட்சிக் கொடியை ஏற்றிவிட்டு வந்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் வெளியானது. இது குறித்து, ஆலாந்துறை போலீஸார் மற்றும் போளுவாம்பட்டி வனத்துறையினர் விசாரித்து வந்தனர்.
கோவை வனக்கோட்ட அலுவலர் ஜெயராஜ் உத்தரவின்பேரில் மலைப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் உள்ள வேட்டைத் தடுப்புக் காவலர்கள் கட்சிக் கொடியை அகற்றினர். மலையில் தவெக கொடியை ஏற்றியது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.