மலைக்கிராம சாலை மேம்பாட்டுக்காக  ஒதுக்கப்பட்ட மத்திய அரசு நிதி எங்கே? - எல்.முருகன், அண்ணாமலை கேள்வி


மேட்டுப்பாளையத்தில் சாலை வசதியில்லாததால் உயிரிழந்த நபரின் உடலை தோளில் சுமந்து சென்ற சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் மலைக்கிராம சாலை மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட மத்திய அரசின் நிதி எங்கே என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நெல்லித்துறை கிராம ஊராட்சியில், கடமான்கோம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை எடுத்து செல்ல போதிய சாலைவசதி இல்லாததால், கிராமத்து இளைஞர்களின் உதவியுடன் தோளில் உடலை சுமந்து செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

மத்திய அமைச்சர் எல்.முருகன்: மேட்டுப்பாளையம் பகுதியில் உயிரிழந்த நபரின் உடலை எடுத்துச் செல்ல சாலைவசதி இல்லாததால், 5 கிமீ தூரத்துக்கு அவரது உடலை கிராமத்து இளைஞர்கள் தோளில் சுமந்து கொண்டு சென்ற அவலநிலை மிகவும் வருத்தமளிக்கிறது. தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ஆட்சி செய்து கொண்டிருப்பதாய் பெருமிதம் கொள்ளும் போலி ஆட்சியாளர்கள், இதுபோன்ற மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களிடம் வாக்கு சேகரிக்க மட்டுமே வந்து சென்றிருக்கின்றனர்.

பிரதமரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டமானது செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில், அத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிதியெல்லாம் எங்கே செல்கிறது, தமிழகத்தில் குவிக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தாமல் விட்டதன் விளைவே இதுபோன்ற அவலங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இந்தி எழுத்துகளை அழிப்பதில் ஆர்வம் காட்டும் ஆட்சியாளர்கள், அடிப்படை சாலைவசதி இன்றி தவித்து வரும் மக்களின் அவலநிலை குறித்து எள்ளளவும் கவலைகொள்ளாதது ஏமாற்றும் செயலாகும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: மேட்டுப்பாளையத்தில் இறந்த ஒருவரின் உடலை டோலி கட்டி, தூக்கிச் செல்லும் காணொளி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வசித்து வரும் பகுதியில் முறையான சாலை வசதிகள் இல்லை என்பது, தமிழக அரசின் அவலநிலைக்குச் சான்றாகும். மத்திய அரசின் கிராம சதக் யோஜனா திட்டத்தின்கீழ் கடந்த 10 ஆண்டுகளில் மலைக் கிராமங்களில் சாலைகள் அமைக்க மத்திய அரசு பெருமளவில் நிதி ஒதுக்கியிருக்கிறது.

ஆனால் தமிழக மலைக்கிராமங்களில் சாலைகள் அமைக்கப்படாமல் மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். எனில் மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கே சென்றது? இனியும் தாமதிக்காமல், தமிழகம் முழுவதும், சாலை வசதி இல்லாத மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலைகள் அமைத்துத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்

x