தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள முத்தனூர், அஸ்தகிரியூர், கெடகார அள்ளி, சில்லார அள்ளி, லிங்கநாயக்கன அள்ளி, மணியம்பாடி, ரேகட அள்ளி, மெனசி, பூதநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் தக்காளியை அதிக பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி மண்டிகளுக்கு தக்காளியின் வரத்து அதிகரித்து வருகிறது.
இதனால் தக்காளியின் விலை வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி குறைந்த பட்சம் ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை குறையத் தொடங்கியது.
நேற்று ஒரு பெட்டி தக்காளி ரூ.200 முதல் ரூ.250 வரை மட்டுமே விற்பனையானது. தக்காளி விளைச்சலுக்கு சாதகமான பருவம் என்பதால் வரும் நாட்களில் உற்பத்தி மேலும் அதிகரித்து விலை சரியும் என்பதால் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் .