ஓசூரில் காலிஃபிளவர் மகசூல் அதிகரிப்பு: விலை சரிவால் விவசாயிகள் வேதனை


ஓசூர்: ஓசூர் பகுதியில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் காலிஃபிளவர் மகசூல் அதிகரித் துள்ளது. அதேநேரம் சந்தையில் வரத்து அதிகரிப்பால் விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஓசூர், பாகலூர், ஆவலப்பள்ளி, கெலமங்கலம், தளி, தேன்கனிக் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சொட்டு நீர் பாசனம் மூலம் காலிஃபிளவர். பீன்ஸ். கேரட். உருளைக்கிழங்கு. முள்ளங்கி, பீட்ரூட் உள்ளிட்ட பயிர் களை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் விளையும் காய்கறிகள் தரமாகவும், சுவையாகவும் உள்ளதால், கோவை, ஈரோடு, சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஒசூர் பத்தளப்பள்ளி காய்கறி சந்தையிலிருந்து தினசரி விற்பனைக்குச் செல்கிறது. இந்நிலையில், தற்போது நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் காலிஃபிளவர் மகசூல் அதிகரித்துள்ளது. இதனால், சந்தைக்கு வரத்து அதிகரித்து விலை சரிந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கரில் காலிஃபிளவர் பயிரிட சுமார் 20 ஆயிரம் நாற்றுகள் தேவைப் படுகின்றன. இதற்காக நர்சரிகளில் ஒரு நாற்று ரூ.1-க்கு வாங்கி வந்து அதனை நடவு செய்து. உரம் மற்றும் வேலையாட்கள் கூலி என ஒரு ஏக்கருக்கு மொத்தம் ரூ.65 ஆயிரம் வரை செலவு செய்கிறோம். காலிஃபிளவர் நாற்று நடவு செய்யப்பட்டு நன்கு பராமரித்தால், 55 முதல் 60 நாட்களில் பூ அறுவடைக்குத் தயாராகிறது.

ஒரு ஏக்கரில் 15,000 கிலோ வரை அறுவடை செய்யலாம். சந்தையில் வழக்கமாக 50 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை ரூ.700 முதல் ரூ.900 வரை விற்பனை யாகும். தற்போது, மகசூல் அதிகரித் துள்ளதால், ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனை சந்தைக்கு காலிஃபிளவர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு மூட்டை ரூ.1,000-க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.300-க்கு விற்பனையாகிறது. இதனால், அறுவடை கூலி கூட கிடைக்காததால், பல விவசாயிகள் அறுவடையைத் தவிர்த்து வருகின் றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

x