கோடைகாலத்தில் கால்நடைகளை வெப்பத்திலிருந்து பாதுகாப்பது எப்படி? - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


திருப்பத்தூர்: கோடை காலம் தொடங்கி விட்டதால் கால்நடைகளை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது: வெப்ப அழுத்தம் என்பது அதிக வெப்ப நிலை தொடர்பான அனைத்து மன அழுத்தத்தையும் குறிக்கிறது. இது கால்நடைகளில் வெப்ப ஒழுங்கு முறை மாற்றங்களை தூண்டுகிறது. கடுமையான வெப்பத்தினால் கால்நடைகளுக்கு வெப்ப அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் உடல் வெப்பநிலை உயர்வு, இதய துடிப்பு விகிதம் அதிகரிப்பு, புற ரத்த ஓட்டம் அதிகரிப்பு, தீவன உட்கொள்ளல் குறைதல் மற்றும் நீர் உட்கொள்ளல் அதிகரிப்பு போன்றவை ஏற்படும்.

மேலும் உற்பத்தித்திறன் இழப்பு, இனப்பெருக்க திறன் குறைதல் மற்றும் தீவிர நிகழ்வுகளில் உயிர் இழப்புக்கு கூட வழிவகுக்கும். வெப்ப அழுத்தத்தினால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பால் உற்பத்தி திறனில் கடுமையான இழப்பு ஏற்படுகிறது. எனவே, வெப்பத்தில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.

கோடை காலம் தொடங்கிவிட்டதால், கால்நடைகளை நிழலில் கட்டி வைக்க வேண்டும். வைக்கோல், ஓலை போன்ற பொருட்களால் கூரையை வேய்வது கால்நடைகளுக்கு குளிர்ச்சியான சூழலை வழங்க உதவும். கால்நடைகள் கட்டப்பட்டிருக்கும் இடத்தை சுற்றி ஓலைச்சுவர் அல்லது ஈரமான சாக்கு துணி, சாக்குப் பைகளைப் பயன்படுத்தி வெப்ப காற்றில் இருந்து பாதுகாக்க தடைகளை உருவாக்க வேண்டும்.

மூடப்பட்ட கொட்டகையில் ஒரு மாட்டுக்கு 3 அடிக்கு 1 அடி என்ற அளவில் ஒரு காற்றோட்டக் கருவி இருக்க வேண்டும். இந்த கொட்டகைகளில் காற்றோட்டத்தை எளிதாக்க கனரக மின் விசிறி சிறந்த தேர்வாகும். 10 முதல் 30 நிமிட இடைவெளியில் 1 முதல் 5 நிமிடங்கள் வரை கால் நடைகளில் உடலில் நேரடியாக தண்ணீரை தெளிப்பதன் மூலமும் வெப்ப அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். கால் நடைகளுக்கு 24 மணி நேரமும் போதுமான அளவு குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும்.

மேலும் அவற்றை நிழலில் வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் உணவளிக்க வேண்டும். மேலும் கால்நடைகளை அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டும். வெப்பமான கால நிலையில் அதிகரித்த தாதுக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய அதிகரித்த தாதுப்பொருட்கள் உள்ள உணவுகளை அளிக்க வேண்டும்.

அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும். இவற்றை குளிர்ந்த இடத்தில் கட்டி வைத்து, குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும் அல்லது ஈரமான விரிப்புகளில் சுற்றி விசிறி வழங்க வேண்டும். கால்நடைகள் மட்டுமின்றி வீட்டில் வளர்க்கும் செல்லபிராணிகளையும் கோடை காலத்தில் பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” இவ்வாறு அவர்கள் கூறினர்.

x