கொடிவேரி அணை அருகே பவானி ஆற்றங்கரையில் சாய ஆலைக்கு அனுமதி: விவசாயிகள் குற்றச்சாட்டு


ஈரோடு: விவசாயிகள், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி பவானி ஆற்றின் கரையில், தனியார் சாய தொழிற்சாலை அமைய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக, கோபி கொடிவேரி அணை பவானி நதி பாசன விவசாயிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் சுபி. தளபதி வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை மாவட்டம் சிறுமுகைக்கு அருகே பவானி ஆற்றில் சாயக்கழிவு தொடர்ந்து கலக்கப்படுகிறது. தற்போது ஆற்றின் நீரோட்டம் குறைவாக உள்ள நிலையில், சாயக்கழிவு நீரால், ஆற்றின் நீர் முழுவதும் கருப்பு நிறமாக மாறியுள்ளது.

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் செய்ததன் அடிப்படையில், அதிகாரிகள் இந்த நீரை ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில், பவானி ஆற்று நீர் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு உகந்ததல்ல என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருக்கிறது.

பவானி ஆற்றுநீரைதான் ஈரோடு ,கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் 50 லட்சம் மக்கள் குடிநீராக பயன்படுத்துகிறோம். கொடிவேரி, கீழ்பவானி, காலிங்கராயன் பாசனத்துக்குட்பட்ட 3 லட்சம் ஏக்கர் நிலம் பவானி நீரினைக் கொண்டு பாசனம் பெற்று வருகின்றன.

இந்நிலையில், கொடிவேரி அணைக்கு அருகே பவானி ஆற்றங்கரையில், கீழ்பவானி பாசன ஆயக்கட்டு நிலத்தில், தனியார் சாய ஆலை அமைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரினர். அரசின் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஆற்றங்கரையிலிருந்து 5 கிலோ மீட்டருக்கு உள் பகுதியில் சாய ஆலை அமைக்கக் கூடாது என பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தினோம். பாசன சபைகளின் சார்பில் தமிழக முதல்வரில் தொடங்கி அமைச்சர்கள், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது.

கொடிவேரி பாசனத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 16 ஊராட்சிகள், ஏழு பேரூராட்சிகளில் மாசு ஏற்படுத்துகிற எந்த ஆலைகளையும் ஆறு மற்றும் பாசன கால்வாய்களின் கரை ஓரத்தில் அமைக்க கூடாது என்று சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவற்றை எல்லாம் அலட்சியப்படுத்தி, தினசரி 15 லட்சம் லிட்டர் நீரை பவானி ஆற்றில் எடுத்து, மாசு ஏற்படுத்துகிற சாய தொழிற்சாலையை ரூ.100 கோடி செலவில் அமைக்கும் அனுமதியை தமிழக அரசும், மாசுகட்டுப்பாட்டு வாரியமும் அளித்துள்ளன. அரசின் இந்த முடிவுக்கு எதிராக விவசாயிகளை ஒன்று திரட்டி தொடர் போராட்டங்களை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x