திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் கீழ்மலை அடிவாரப் பகுதிகளான அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை, ஆத்தூர், வத்தலக்குண்டு பகுதிகள், பழநி, விருப்பாட்சி மற்றும் இதன் சுற்றுப்புற பகுதிகளில் தென்னை விவசாயம் அதிக பரப்பில் நடைபெறுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 31,826 ஹெக்டேர் பரப்பில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 3,29,504 மெட்ரிக் டன் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேங்காய்கள் விற்பனைக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. தேங்காய்க்கு தேவை எப்போதும் அதிகம் உள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியிலிருந்தே தேங்காய் விளைச்சல் படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனால், தேங்காய் வரத்துக் குறைந்து படிப்படியாக விலை அதிகரிக்க தொடங்கியது. தற்போது, ஒரு கிலோ தேங்காய் ரூ.60-க்கு மேல் விற்பனையாகிறது. இது சமீபகாலத்தில் உச்சபட்ச விலையாக உள்ளது.
இதுகுறித்து சித்தையன்கோட்டையைச் சேர்ந்த தென்னை விவசாயி ரசூல் மொய்தீன் கூறியதாவது: தேங்காய் விலை உயர்வுக்கு உடனடிக் காரணம் என எதுவும் இல்லை. ஆனால், கடந்த ஓராண்டாக அடுத்தடுத்து ஏற்பட்ட பாதிப்புகள்தான் காரணம். கடந்த 4, 5 மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து, மரத்திலேயே சிறிய அளவிலான பிஞ்சுக் காய்கள் கருகி உதிரத் தொடங்கின.
இதையடுத்து, மீண்டும் தென்னம்பாலை உருவாகிய நிலையில், தொடர் மழையால் பாதிப்பு ஏற்பட்டு காய் பிடிக்கவில்லை. இதனாலும் பாதிப்பு ஏற்பட்டது. அடுத்தடுத்து, தென்னை விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டதால் தேங்காய் விளைச்சல் வெகுவாக குறையத் தொடங்கியது. இதனால், தற்போது தேங்காய் விலை உயர்ந்து விற்பனையாகிறது.
தேங்காய் ஒரு டன் தற்போது ரூ.57 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். ஒரு தேங்காய் குறைந்தபட்சம் ரூ.20-க்கு மேல் வெளிமார்க்கெட்டில் விற்பனையாகிறது. தொடர்ந்து வரத்துக் குறைவதால் தேங்காய் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு காலநிலையைப் பொருத்துதான் தேங்காய் விளைச்சல் இருக்கும். விளைச்சல் அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.
இது குறித்து திண்டுக்கல் தோட்டக்கலை துணை இயக்குநர் காயத்ரி கூறுகையில், ‘தென்னை விவசாயம் செய்ய திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் தென்னை விவசாயப் பரப்பு ஆயிரம் ஹெக்டேர் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் தொடர் மழையால் தென்னையில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது பாதிக்கப்பட்டது. இதனால், மரத்தில் காய்ப்புக் குறைந்தது. இதன் விளைவாக, தேங்காய் உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளது. கடும் வெயில், அதிக மழைப்பொழிவு போன்ற இயற்கை பாதிப்புதான் தென்னை விளைச்சல் குறையக் காரணம்’ என்றார்.