வேடசந்தூர் பரிதாபம்: அரசு பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் தந்தை, மகள் உயிரிழப்பு


வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகே காளணம்பட்டியை சேர்ந்த ஜேசிபி ஓட்டுநர் சந்தோஷ் (34). இவர், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் மகன் சாய் அஸ்வந்த் (10), மகள் சாய் அஸ்மிதா (7) ஆகியோருடன் வேடசந்தூர் சென்றுவிட்டு காளணம்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

வேடசந்தூர் அருகே காக்காதோப்பு பிரிவு பகுதியில் சென்றபோது, திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற அரசுபேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே சந்தோஷ் உயிரிழந்தார். மகன், மகள் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இவர்களை மீ்ட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு மகள் சாய் அஸ்மிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகன் சாய் அஸ்வந்த் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து வேடசந்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x