செல்லூர் ராஜூவின் ஹாட்ரிக் வெற்றி - மதுரை மேற்கு தொகுதியை வெல்ல அமைச்சர் மூர்த்தி ஸ்கெட்ச்!


மதுரை: தமிழகத்தில் 2026-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என அமைச்சர்கள் கூறினர்.

மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில், விளாங்குடியில் மதுரை மேற்குத் தொகுதி பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: மதுரை மேற்குத் தொகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக வெற்றி பெறவில்லை. மாநகராட்சித் தேர்தலிலும் 30 சதவீதத்துக்கும் குறைவாகவே வெற்றி பெற்றுள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றுள்ளோம். தமிழக முதல்வர் தென் மாவட்டங்களில் குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அது தான் எங்களின் இலக்காக உள்ளது. மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன், மதுரை மேற்குத் தொகுதியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக உருவாக்க வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்துகளுக்கும் இடமளிக்காமல், அனைவரும் ஒற்றிணைந்து செயல்பட வேண்டும்.

மேற்குத் தொகுதியில் 22 மாநகராட்சி வார்டுகள் உள்ளன. ஒரு பேரூராட்சி, 7 ஊராட்சிகள் உள்ளன. இங்கு என்னென்ன அடிப்படை வசதிகள் தேவை என்பதை ஆய்வு செய்வதற்கான கூட்டம், பிப்.28-ம் தேதி நடைபெறும். இந்த ஆய்வுக் கூட்டங்களில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு நிறைவேற்றப்படும். மதுரை மாவட்டத்தில் 10 பேரவைத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: மாவட்டத்தில் உள்ள 10 பேரவைத் தொகுதிகளில் 2016 தேர்தலில் 2 தொகுதிகளிலும், 2021-ல் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். மாநில அளவிலான சராசரியை ஒப்பிட்டால் 5 தொகுதியில் வெற்றி என்பது குறைவு தான். உள்ளாட்சித் தேர்தல்களில் பல தொகுதிகளில் நூறு சதவீத வெற்றி கிடைத்தாலும், மேற்குத் தொகுதியில் 30 சதவீதம்கூட வெற்றி கிடைக்கவில்லை. அதை மாற்றும் வகையில் கூட்டம் நடத்துவது நல்ல தொடக்கமாகும்.

மேற்குத் தொகுதியில் திமுக 3 முறை தோல்வி அடைந்திருப்பதால், மாற்றத்தை கொண்டுவருவது கூடுதல் கடினமாக இருக்கும். இருப்பினும், அமைச்சர் மூர்த்தி திறமையானவர். இந்த முறை வெற்றி இலக்கை அடைவோம். அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். கட்சியினர் ஒற்றுமையாக இருக்கும் இடங்களில் வெற்றி கிடைத்திருக்கிறது. அனைவரும் இணைந்து செயல்பட்டு வெற்றியை உறுதி செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், மேயர் இந்திராணி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் எஸ்.பாலா, முன்னாள் மேயர் குழந்தைவேலு, வெங்கடேஷன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி, பகுதிச் செயலாளர்கள் அக்ரி கணேசன், ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் பேசினர்.

x