அதிமுக ஆட்சியை மீண்டும் மலர செய்வோம்: தொண்டர்களுக்கு பொது செயலாளர் பழனிசாமி கடிதம்


சென்னை: அதிமுக தலைமையில் சிறப்புமிக்க கூட்டணி அமையப்போவதாகவும் அதிமுக ஆட்சியை மீண்டும் மலரச் செய்வோம் என்றும் பொதுச் செயலாளர் பழனிசாமி தொண்டர்களை அறிவறுத்தியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளையொட்டி அதிமுக தொண்டர்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், எல்லா நேரத்திலும் தாயாகவும், சகோதரியாகவும், உற்ற தோழமை கொண்டும், தனி வாழ்விலும், பொது வாழ்விலும் இமயம்போல் உயர்ந்து விளங்கிய ஜெயலலிதாவை, ஒரு நாளின் ஒவ்வொரு நிகழ்விலும், நகர்விலும் தமிழக மக்கள் நினைத்துப் பார்க்கின்றனர்.

ஆனால், திமுக ஆட்சியில் பொழுது விடிந்து, பொழுது போனால், தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும்கூட பாதுகாப்பற்ற நிலையும், பாலியல் வன்கொடுமைகளும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. நான்கு திசைகளிலும் தினந்தோறும் கள்ளச்சாராயம், போதைப் பொருள் புழக்கம், வெட்டு, குத்து, கொலை என சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உண்மைகளை எடுத்துச் சொல்வோருக்கு வாய்ப்பூட்டு போடப்படுகிறது.

திமுக அரசு, இருமொழிக் கொள்கையை காப்பாற்றக்கூட திறனற்றதாக உள்ளது. மிகப்பெரிய எண்ணிக்கையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தாலும், தமிழகத்தின் உரிமைகளைக் காப்பாற்றுவதற்கு திறனற்ற அரசாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த அவலங்களை எல்லாம் மாற்ற வேண்டும். தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும். தமிழகம் பொருளாதார வளர்ச்சி அடைந்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்ய வேண்டும். அதற்கு ஒரே தீர்வு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நல்லாட்சிகளைப் போல, மீ்ண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். ஓநாயும் வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா, களைகளும் பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா, விசுவாசியும் துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா, முடியாது, முடியாது என நீங்கள் முழங்குவது கேட்கிறது.

"அதிமுகதான் உண்மையான மக்கள் இயக்கம், மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம், இந்த இயக்கம் இருக்கின்ற வரை, நான் இருக்கின்ற வரை, இந்த இயக்கம் தமிழர்கள் வாழ்வு வளம்பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்" என ஜெயலலிதா சூளுரைத்தார்.

அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் ஜெயலலிதா பிறந்த நாள். அதிமுக தலைமையிலான சிறப்புமிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப் போகிறோம். அதற்காக அயராது உழைப்போம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது

x