பொள்ளாச்சி: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொள்ளாச்சி ரயில் நிலையத்தின் பெயர்ப் பலகையில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை கருப்பு மை பூசி அழித்த திமுகவினர் மீது ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் கல்விக்கான நிதியை வழங்க வேண்டுமானால், தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் எனவும், மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இது இந்தியை திணிக்கும் முயற்சி என திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், திமுகவின் சட்டதிட்ட திருத்தக் குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையில், நகரமன்ற உறுப்பினர் செந்தில்குமார், கோவை மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன், முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தனம் தங்கதுரை உள்ளிட்டோர் நேற்று பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர்ப் பலகையில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை கருப்பு மை பூசி அழித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற ரயில்வே போலீஸார், இந்தி எழுத்துகள் மீது பூசப்பட்ட கருப்பு மையை அகற்றினர்.
இதுகுறித்து பொள்ளாச்சி ரயில்வே போலீஸ் எஸ்.ஐ. உன்னிகிருஷ்ணன் கூறும்போது, “இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.