வல்லநாட்டில் அரசு மாதிரி பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா தலைமை வகித்தார். அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் கஜேந்திர பாபு ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் இஸ்ரோ துணை திட்ட இயக்குநர் வீரானாம் முருகன் பேசியதாவது: இஸ்ரோ கடந்த 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அணுசக்தி துறையின் அங்கமாக இருந்த இஸ்ரோ 1969-ம் ஆண்டு முதல் தனித்துறையாக செயல்பட்டு வருகிறது. முதன் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய நாடு ரஷ்யா. நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு இந்தியா. அரசு பள்ளியில் தான் நான் பயின்றேன். பள்ளியில் நான் முதல் மாணவன். ஆனால் தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் கடைசி இடம் தான் எனக்கு கிடைத்தது. எனினும் பாலிடெக்னிக் முடிக்கும் போது முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன். ஆங்கிலத்தை புரிந்து கொள்வதில் பிரச்சினை இருந்தது.
இன்று அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது. மேல்படிப்பு படிக்கும்போது அங்கு நகரத்தில் உள்ள மாணவர்கள் பேசுகின்ற ஆங்கிலம், அதனால் ஏற்படுகின்ற பிரச்சினைகளை சந்திக்கும் நிலை எனக்கு ஏற்பட்டது. இதனால் என்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டேன். படிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் அவர்களோடு போட்டி போடுகின்ற திறமையை வளர்த்துக் கொண்டேன். யாதும் ஊரே யாவரும் கேளிர் என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார்கள். எல்லாம் நமது ஊரு தான்.
எல்லாரும் நமது உறவினர்கள் தான் என எளிதாக குறிப்பிடும் நமது மொழி, அத்தகைய செழுமை வாய்ந்தது. தமிழ்நாட்டை விட்டு வெளியே நான் சென்று 40 ஆண்டுகள் ஆகிறது. மற்ற இடங்களில் ஆங்கிலத்தில் பேசுகிறேன். தமிழை மறக்கக்கூடாது. தமிழை நன்கு படியுங்கள். தமிழ் மொழியை நேசியுங்கள். அரசு பள்ளியில் படித்தால் நமக்கு வேலை கிடைக்காது என்பது கிடையாது.
மாநில அரசு கூறுவது போல் தமிழும், ஆங்கிலமும் நமக்கு இரு மொழி கல்வி. ஆங்கிலம் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் செல்லும்போது உதவும். இந்தி தேவைப் பட்டால் படித்துக் கொள்ளுங்கள். இந்தி என்பது படிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. அது விருப்ப பாடம். தமிழ் என்பது உயிர். தமிழை நேசியுங்கள், நன்றாக படியுங்கள். நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்றார் அவர். மாவட்ட கல்வி அலுவலர் கண்ணன், மாவட்ட மெட்ரிக் கல்வி அலுவலர் சிதம்பர நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.