திருச்சியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட தொலைக்காட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி படங்கள் இடம் பெற்ற சம்பவத்தால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
திருச்சி மேலரண் சாலையில் வைகவுண்டஸ் கோஷன் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 6 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அங்குள்ள தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில், தொலைக்காட்சியில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஆகியோரது புகைப்படங்களும் ஒளிபரப்பானது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவசர அவசரமாக அந்த புகைப்படங்களை மாற்றினர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அதிமுக ஆட்சியின்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச லேப்டாப் மூலம் முதல்வரின் நிகழ்வை ஒளிபரப்பு செய்துள்ளனர். எப்போது அந்த லேப்டாப்பை ஆன் செய்தாலும், ஆஃப் செய்தாலும் முன்னாள் முதல்வர்கள் புகைப்படங்கள் திரையில் வரும். நிகழ்ச்சி முடிந்த பிறகு லேப்டாப்பை ஆஃப் செய்யும்போது அவர்களது புகைப்படங்கள் வந்துள்ளன. இனிமேல் அரசு விழாக்களில் இலவச லேப்டாப்களை பயன்படுத்தக்கூடாது என்று கூறியிருக்கிறோம்" என்றனர்.