‘விவசாயத்துக்கு ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தாதீர்’ - தமிழக விவசாயிகள் கோருவது ஏன்?


படம்: ஆர்.வெங்கடேஷ்

இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளதால், மின்வாரியம் சார்பில் விவசாயப் பணிகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், உழவர் பெருந்தலைவர் சி.நாராயணசாமியின் 100-வது ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் கோரிக்கை மாநாடு தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு, தஞ்சாவூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் ப.ஜெகதீசன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கோ.ஜெய்சங்கர் வரவேற்றார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் த.மணிமொழியன், மாவட்டத் தலைவர்கள் வேலூர் பா.சதானந்தன், கடலூர் ஆர்.நந்தகுமார், மகளிர் அணி மாவட்டத் தலைவர் டி.வினோலியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டை தொடங்கிவைத்த மாநில பொதுச் செயலாளர் கே.சுந்தரம், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி மாதந்தோறும் காவிரி நீர் பங்கீட்டை தமிழகத்துக்கு கர்நாடகா வழங்க வேண்டும். மேகே தாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3,000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் வழங்கிய தேர்தல் வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.

டெல்டா முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். பயிர்க் காப்பீடு திட்டத்தை தமிழக அரசே செயல்படுத்த வேண்டும். இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளதால், மின்வாரியம் சார்பில் விவசாயப் பணிகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்.

நாராயணசாமி நாயுடு பிறந்த ஊரான வையம்பாளையத்தில் நூற்றாண்டு வளைவு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ள தமிழக முதல்வர், பெரம்பலூரில் உரிய அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ள சி.நாராயணசாமியின் சிலையை அகற்றுவதை தடுக்க வேண்டும். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களை விவசாயப் பணிக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மாநாட்டில், விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவர் மு.சேரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, சி.நாராயணசாமியின் படத்துக்கு விவசாயிகள் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினர்.

x