காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் சார்புடைய நளபுரநாயகி சமேத நளநாராயண பெருமாள் கோயிலில் மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும்.
அதன்படி, நிகழாண்டு உற்சவ பத்திரிகையை கோயில் நிர்வாகம் அச்சடித்து வெளியிட்டது. அதில், வழக்கத்துக்கு மாறாக புதுச்சேரி அரசு இந்து சமய நிறுவனங்கள் துறை என்று போட்டிருந்ததாகவும், கோயில் தனி அதிகாரியாக ஆட்சியர் இருக்கும்போது, பத்திரிகையின் அடியில் மாவட்ட ஆட்சியர் என்று மட்டும் போட்டிருப்பது தவறு எனவும், திருநள்ளாறு கோயில் சார்ந்த கிராமங்களில் வசிப்போருக்கு முறையாக அழைப்பு விடுக்க வில்லை எனவும் கோயில் கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் சிலர் ஆட்சியர் சோமசேகர் அப்பாராவிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். இதுதொடர்பாக கோயில் நிர்வாகத்தினரை அழைத்து ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், கொடியேற்ற நாளான நேற்று காலை 10.30 முதல் 11.30 மணிக்குள் கருடக் கொடியேற்றத்துக்கான ஏற்பாட்டை கோயில் நிர்வாகம் செய்தது. சுவாமி அலங்கரித்து சந்நிதியில் எழுந்தருளச் செய்யப்பட்டது. விழா தொடங்கும் முன்பாக கோயில் கிராமங்களைச் சேர்ந்தோர் திரளாக நள நாராயணப் பெருமாள் கோயிலில் திரண்டு, பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தாமல் எப்படி கொடியேற்ற முடியும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோயில் நிர்வாக மேலாளர் சீனிவாசன், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்து, உற்சவ கொடியேற்றம் ரத்து செய்யப்பட்டது. இதனால், விழாவுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கடந்தாண்டு கொடியேற்றத்தின்போது, கொடி மரம் முறிந்து விழுந்தது. தற்போது, 2-வது ஆண்டாக உற்சவ கொடியேற்றம் தடைபட்டுள்ளது. எனவே, திருநள்ளாறு கோயிலில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை ஏற்படுத்தி, உற்சவங்கள் தடையின்றி நடத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.