முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்த ‘ரயில் பரிதாபங்கள்’ போஸ்டுக்கு ரியாக்ட் செய்த தெற்கு ரயில்வே!


கோப்புப்படம்

சென்னை: தெற்கு ரயில்வேயில் 13 ஜோடி ரயில்களில் பொதுப் பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளதாகவும், மூன்றடுக்கு ஏசி பெட்டிகளில் கூடுதலாக பெட்டிகள் சேர்க்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகின. இந்த மாற்றம் பிப்.21-ம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தவிர, நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் எண்ணிக்கை 4-ல் இருந்து 2 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “சமூக வலைதளம் முழுக்க ரயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம். அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான முன்பதிவில்லாத பெட்டிகளை அதிகரிப்பார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது ‘ சேடிஸ்ட்’ அரசு” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் செய்திகள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை. விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் பயனடையும் வகையில், பிப்ரவரி மாதம் முதலே பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டது. ஆனால், மகா கும்பமேளா நிகழ்வுக்காக ரயில் பெட்டிகள் தேவைப்படுவதால், கூடுதலாக தயாரிக்கப்பட்ட அனைத்து பெட்டிகளும் இணைத்து, சிறப்பு ரயில்களாக பிரயாக்ராஜ்க்கு இயக்கப்படுகின்றன.

மகா கும்பமேளா பிப்.26-ம் தேதியுடன் முடிவடைவதையடுத்து, மார்ச் மாதம் முதல் இந்த பெட்டிகள், தெற்கு ரயில்வே சார்பில் விரைவு ரயில்களில் கூடுதலாக இணைத்து இயக்கப்படும். இதற்கான பட்டியலும் தயாராக உள்ளது. அந்த வகையில், ஈரோடு – சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் ஏற்காடு விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் – ஐதராபாத் இடையே இயக்கப்படும் அதி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயில் ஆகிய ரயில்களில் தற்போதுள்ள 3 பொது பெட்டிகள், 4 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.

இதுதவிர, புதுச்சேரி – மங்களூரு விரைவு ரயில், விழுப்புரம் – கோரக்பூர் விரைவு ரயில், புதுச்சேரி – கன்னியாகுமரி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் – பாலக்காடு விரைவு ரயில், திருநெல்வேலி – புருலியா விரைவு ரயில்களில் தற்போதுள்ள 3 முன்பதிவு இல்லாத பெட்டிகள், 4 பெட்டிகளாக மார்ச் மாதம் முதல் அதிகரித்து இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில், சென்னை சென்ட்ரல் – ஆலப்புழா அதிவிரைவு ரயில், சென்னை சென்ட்ரல் – மைசூர் விரைவு ரயில் ஆகிய ரயில்களில் தற்போதுள்ள 2 முன்பதிவு இல்லாத பெட்டிகள், 4-ஆக அடுத்த மாதம் முதல் அதிகரித்து இயக்கப்படும்

மொத்தம் 14 விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அதிகரித்து இயக்கப்பட உள்ளன. மற்ற ரயில்களிலும் தலா 4 முன்பதிவு இல்லாத பெட்டிகள் வரை அடுத்தடுத்த மாதங்களில் இணைத்து இயக்க ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

x