திருவள்ளூர்: பட்டா வாங்க லஞ்சம் பெற்றதாக கூறி வீடியோ வைரல் ஆன நிலையில், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மேல்முதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரவி( 64), பட்டா அளிக்க லஞ்சம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை வருவாய்த் துறை அதிகாரிகள் மேற்கொள்வதாக கூறும் காணொளியும், வட்டாட்சியரின் உதவியாளரிடம் பணம் கொடுக்கும் காணொளியும் சமூக வலைதளங்களில் நேற்றுமுன்தினம் வைரலானது.
வீடியோவில், விவசாயி ரவி பேசுகையில், ‘‘மேல்முதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தயாளன், சாமிநாதன் ஆகியோருக்கு சொந்தமான, 70 செண்ட் நிலத்தை வாங்க, கடந்த ஆண்டு முன்பணம் கொடுத்தேன். அவர்களது குடும்ப சொத்தில் இருந்து, இருவருக்கு மட்டும் சொந்தமான 70 செண்ட் நிலத்தை அளவீடு செய்து, உட்பரிவு செய்து இருவரது பெயரில் பட்டா அளிக்குமாறு, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு நடந்த ஜமாபந்தியின் போது, தயாளன், சாமிநாதன் ஆகியோர் மனு வழங்கினர்.
அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், வட்டாட்சியர் சரவணகுமாரியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தயாளன், முன்னாள் ஊராட்சி தலைவர் ஏழுமலையுடன் நேரில் சந்தித்தேன். அப்போது வட்டாட்சியர் கூறியபடி, உட்பிரிவு செய்ய, அப்போதைய தலைமை அளவர் விஜய்யிடம் லஞ்சமாக ரூ. 60 ஆயிரம் கொடுத்தோம். 3 நாள் கழித்து, ஆன்லைனில், உட்பிரிவு பட்டா பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி தெரிவித்து அனுப்பினர். பல நாட்கள் கடந்தும் பட்டா வராததால், எப்.எம்.பி., பட்டா, சிட்டா, உட்பிரிவுக்கு வட்டாட்சியர் கையெழுத்திட்ட ஆவணங்களுடன் மீண்டும் வட்டாட்சியரை சந்தித்தோம்.
இந்த ஆவணங்கள் உங்களுக்கு எப்படி கிடைத்தது என கூறி, ஆவணங்களை வட்டாட்சியர் கிழித்து போட்டார். அதற்கு காரணம், தலைமை அளவர் விஜய்யிடம் அளித்த பணம் வட்டாட்சியருக்கு போய் சேரவில்லை என்பதுதான். ஆகவே, வேறு இடத்துக்கு மாற்றலான விஜயை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர், ரூ. 50 ஆயிரத்தை திருப்பி அனுப்பினார். பின்னர், வட்டாட்சியரின் உதவியாளர் காந்தியிடம் ரூ. 40 ஆயிரம் கொடுத்தோம். சாட்சிக்காக, பணம் கொடுப்பதை வீடியோ எடுத்துக்கொண்டோம். அந்த பணத்தில் ரூ. 20 ஆயிரம் மட்டுமே வட்டாட்சியருக்கு சென்றதால், மீண்டும் எங்களை வட்டாட்சியர் அலைக்கழிப்பு செய்தார்.
இதனால், தமிழக முதல்வர் தனி பிரிவுக்கும், லஞ்ச ஒழிப்பு துறைக்கும் புகார் மனு அனுப்பினேன். அதன் மீதான விசாரணை தற்போது நடந்து வருகிறது’ என தெரிவித்தார். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சரவணகுமாரி கும்மிடிப்பூண்டி மாநெல்லூர் சிப்காட் நில எடுப்பு தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். அப்பதவியை வகித்து வந்த என்.ராஜேந்திரன் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிர்வாக நலன் கருதி இப்பணியிட மாற்றம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.