தஞ்சாவூர்: தஞ்சாவூரில் 20 ஆண்டுகளாக ரூ.47 லட்சம் சொத்து வரி செலுத்தாத வணிக வளாகத்தின் முன் மாநகராட்சி நிர்வாகம் குப்பையை கொட்டியதால், உடனடியாக ரூ.5 லட்சம் வரியை வணிக வளாகத்தினர் செலுத்தினர்.
தஞ்சாவூர் சீனிவாசன் பிள்ளை சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் 80 கடைகள் இயங்கி வருகின்றன. இந்த வளாகத்தின் நிர்வாகத்தினர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் இருந்துள்ளனர்.
மாநகராட்சி நிர்வாகத்தினர் பலமுறை கேட்டும் சொத்து வரியை செலுத்தவில்லை. இந்நிலையில், 20 ஆண்டுகளாக செலுத்த வேண்டிய சொத்துவரி ரூ.47 லட்சத்தை கேட்டு மாநகராட்சி அதிகாரிகள் வணிக வளாகத்தின் நிர்வாகிகளிடம் கடந்த சில நாட்களுக்கு முன் நோட்டீஸ் வழங்கினர். ஆனாலும் வரி செலுத்தப்படவில்லை.
இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகத்தினர் நேற்று காலை வணிக வளாகத்தின் ஒரு வாயிலில் குப்பை வண்டியை நிறுத்தி, மற்றொரு வாயிலின் முன்பு குப்பையை கொட்டி வைத்தனர்.
இதனால், வணிக வளாகத்துக்கு வரும் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் முகம் சுளித்தனர். பின்னர், வணிக வளாகத்தினர் உடனடியாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்தினர். இதைத்தொடர்ந்து வணிக வளாகம் முன்பு நிறுத்தப்பட்ட குப்பை வண்டியும், குப்பையும் அங்கிருந்து அகற்றப்பட்டன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொத்து வரியை நீண்டகாலம் செலுத்தாதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், பலர் சொத்துவரி செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களிடம் வரியை வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு வழங்கியுள்ளதால், மாநகராட்சி ஊழியர்கள் வரி வசூலில் ஈடுபட்டுள்ளனர்.
சீனிவாசன் பிள்ளை சாலையில் உள்ள வணிக வளாகத்தினர் கடந்த 20 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தவில்லை. கடந்த ஒருமாதமாக மாநகராட்சி அதிகாரிகள் வரியை வசூலிக்க கடும் முயற்சி எடுத்தும் வரி வசூலிக்க முடியவில்லை. இதையடுத்து தான் மாநகராட்சி நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை கையாண்டது என்றனர்.