குப்பைக்கிடங்காக மாறிய மானாமதுரை கோயில் தீர்த்தக்குளம்: பக்தர்கள் வேதனை


மானாமதுரை பட்டத்தரசி பகுதியில் அலங்கார குளத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பை.

மானாமதுரை: மானாமதுரையில் கோயில் தீர்த்தக்குளம் குப்பைக்கிடங்காக மாறியதால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பட்டத்தரசி பகுதியில் தாயமங்கலம் சாலை அருகே அலங்கார குளம் உள்ளது. வீரஅழகர் கோயில் தீர்த்தக்குளமான இங்கு ஆடி பிரம்மோற்சவ விழாவையொட்டி சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெறும்.

ஆனால் இந்த குளம் முறையான பராமரிப்பின்றி உள்ளதால் அப்பகுதி மக்கள் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குளம் முழுவதும் தாமரைச் செடிகள், குப்பை நிறைந்து காணப்படுகிறது. கழிவுகள் தண்ணீரில் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பட்டத்தரசி கிராம மக்கள் கூறுகையில், ‘ஆண்டுதோறும் தீர்த்தவாரி நடைபெறும் கோயில் குளத்தை பராமரிக்காமல் விட்டுவிட்டனர். முதலில் தாமரைச் செடிகள் மட்டும் முளைத்தன. தற்போது குப்பைக் கிடங்காக மாற்றி விட்டனர். குப்பை, செடிகளை அகற்றி கோயில் குளத்தை பாதுகாக்க வேண்டும்’ என்றனர்.

x