திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே புனல்காடு கிராமத்தில் மலையை குடைந்து மண் கொள்ளையடித்தவர்கள் குறித்து புகைப்பட ஆதாரத்துடன் புகார் தெரிவித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குக் கடந்த 2 மாதமாகக் கூலி வழங்கவில்லை.
கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, தங்களது பணியிடத்தில் இருக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் பணியில் இருப்பது கிடையாது. அவர்கள் பணியிலிருந்தால், அவர்களிடத்தில் மனுவை அளித்துவிடுவோம். ஆட்சியர் அலுவலகம் வரை வர வேண்டிய அவசியம் ஏற்படாது.
விவசாய நிலங்கள் மற்றும் வீதிகளில் சேதமடைந்துள்ள மின் கம்பங்களை மாற்ற வேண்டும். நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கடைமடை வரை தண்ணீர் வருவதை உறுதி செய்ய வேண்டும். ஆரணி அரசு மருத்துவமனையில் கண்ணாடி விரியன் பாம்புக் கடிக்கு மருந்து இல்லை. உயிரிழப்புகள் ஏற்படுகிறது. விஷ முறிவு மருந்துகளை இருப்பு வைத்திருக்க வேண்டும்.
வயிற்றில் அடிக்கின்றனர்: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளை பொருட்களைத் தரம் பிரித்து விலையை நிர்ணயம் செய்ய அதிகாரிகள் இல்லை. பொருட்களைப் பாதுகாக்க இரவு காவலரும் இல்லை. ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்குக் கொண்டு வரப்படும் மூட்டைகளை, முழுமையாக எடை போடுவது கிடையாது. 50 சதவீதம் மட்டுமே எடை போடப்படுகிறது. இடைத் தரகர்கள் ஆதிக்கம் உள்ளது.
விலையைக் குறைத்து நிர்ணயம் செய்து, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றனர். மாவட்டத்தில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். தரமான மணிலா விதையைக் கொள்முதல் செய்ய வேண்டும். நெல் மற்றும் மணிலா விதைகளை, அனைத்து கூட்டுறவுச் சங்கங்களிலும் இருப்பு வைத்திருக்க வேண்டும். மிருகண்டா நதி அணையிலிருந்து தண்ணீர் வெளியேறும் கால்வாயைச் சீரமைத்துக் கொடுக்க வேண்டும்.
தமிழ் மொழி தெரியாத வன அதிகாரி: வன விலங்குகளால் சேதமடையும் ஒரு ஏக்கர் பயிருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது. ஆனால், வனத்துறையினர் 3-ல் ஒரு பங்குக்கும் குறைவாகச் சேதமடைந்ததாகக் கூறி, மதிப்பீடு செய்கின்றனர். களத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்வதில்லை. மாவட்ட வன அலுவலரைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், அவருக்குத் தமிழ் தெரியவில்லை. தமிழ்மொழி தெரியாத அலுவலர் இருப்பதால், பிரச்சினைக்குத் தீர்வு காண முடியவில்லை.
விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். தரணி சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் இருந்து கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையைப் பெற்றுத்தர வேண்டும். திருவண்ணாமலை அருகே புனல்காடு கிராமத்தில் உள்ள மலையை வெட்டி மண் கொள்ளையடித்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. புகைப்படத்துடன் ஆதாரம் அளித்தும் பலனில்லை. கனிம வளம் கொள்ளை போவதைத் தடுக்க வேண்டும் என அரசாங்கம் சொல்கிறது. ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் தடுக்கவில்லை” என்றனர்.