‘தங்கைக்கு முழு சுதந்திரம் உண்டு’ - காளியம்மாள் விலகல் குறித்து சீமான் தடாலடி பதில்!


சென்னை: நாதகவில் இருப்பதற்கும், இயங்குவதற்கும், விலகுவதற்கும் தங்கை காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. அதுகுறித்து முடிவெடுக்கும் முழு உரிமை அவருக்கு உண்டு என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள சீமான், ‘ இலையுதிர் காலம் போல, எங்கள் கட்சிக்கு களையுதிர்காலம். நாதகவில் இருப்பதற்கும், இயங்குவதற்கும், விலகுவதற்கும் தங்கைக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. அதுகுறித்து முடிவெடுக்கும் முழு உரிமை அவருக்கு உண்டு

காளியம்மாள் முதலில் சமூக செயற்பாட்டாளராகத்தான் இருந்தார். அவரை அழைத்து வந்ததும் நான் தான். கட்சியில் இருந்து யார் வேண்டுமானாலும் செல்லலாம், அது அவர்களின் முடிவு, உரிமை. கட்சிக்குள் வந்தால் வாருங்கள் நன்றி என்று சொல்வோம். செல்வதாக இருந்தால் வணக்கம் வாழ்த்துகள் என்று சொல்வோம். இதுதான் எங்கள் கொள்கை” என சீமான் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நாம் தமிழர் கட்சியின் பொறுப்பை குறிப்பிடாமல் அழைப்பிதழில் காளியம்மாள் பெயர் இடம்பெற்றதால், அவர் கட்சியிலிருந்து விலகுவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியானது.

இதனிடையே நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய காளியம்மாள், எதுவாக இருந்தாலும் விரைவில் நானே முடிவை அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார். முன்னதாக, காளியம்மாளை பிசிறு என சீமான் விமர்சித்ததாக ஆடியோ வெளியானது. சீமானின் இந்த விமர்சனத்தால் காளியம்மாள் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்பட்டது.

x