மதுரை, தேனி அரசு அருங்காட்சியகங்களில் கலை பொருட்களை ஒப்படைக்கலாம்: பொதுமக்களுக்கு அழைப்பு


கோப்புப் படம்

மதுரை: அரசு அருங்காட்சியகங்களில் கலைப்பொருட்கள் சேகரிக்கப்படுவதால் பொதுமக்கள் தங்கள் வசமுள்ள கலைப்பொருட்களை ஒப்படைக்கலாம். அதற்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என மதுரை, தேனி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மீ.மருதுபாண்டியன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கலைப்பொருட்களான மானிடவியல், தொல்பொருட்கள், நாணயங்கள், செப்புப்பட்டயங்கள், ஓலைச்சுவடிகள், பழங்குடியினப் பொருட்கள், விலங்கியல், தாவரவியல், சிறப்புத் தபால் தலைகள், விடுதலைப் போராட்ட வீரர்கள் பயன்படுத்திய பொருட்கள், விடுதலைப் போராட்டக் கால செய்தித்தாள்கள் போன்றவை இருந்தால் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கலாம். அதற்குரிய சன்மானம் வழங்கப்படும்.

இத்தகைய கலைப்பொருட்கள் தங்களது இல்லங்களில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தால் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தால், அவர்களது பெயரிலேயே சேர்க்கைப் பதிவேட்டில் பதிவு செய்யப்படும்.

எடுத்துக்காட்டாக, திருத்துறைப்பூண்டியில் ஒரு தென்னந்தோப்பில் கிடைத்த செப்புப்பட்டயம் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்ததன் மூலம் பல்லவர்களின் அரசுரிமை பற்றிய செய்தி வெளிவந்தது. இதேபோல், ஏராளமான கலைப்பொருட்கள் வீட்டுக்குள் முக்கியத்துவம் தெரியாமல் இருக்கலாம். எனவே அப்பொருட்களை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கும் பட்சத்தில் அதற்குரிய சன்மானத்தொகை வழங்கப்படும்.

x