காளியம்மாளும் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுகிறாரா? - சீமானுக்கு அடுத்த அதிர்ச்சி


சென்னை: நாம் தமிழர் கட்சியின் பொறுப்பை குறிப்பிடாமல் அழைப்பிதழில் காளியம்மாள் பெயர் இடம்பெற்றுள்ளதால், அவர் கட்சியிலிருந்து விலகுவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளரான காளியம்மாள் கட்சியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில்தான் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் அடுத்த மாதம் உறவுகள் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மணப்பாட்டில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் தனிப்பட்ட நபரின் இல்ல விழாவாக இந்த உறவுகள் சங்கமம் விழா நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழில் காளியம்மாள் பெயர் சமூக செயற்பாட்டாளர் என இடம்பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சியின் பொறுப்பை குறிப்பிடாமல் அழைப்பிதழில் தனது பெயரை சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிடுமாறு காளியம்மாள் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த நிகழ்வில் காளியம்மாள் மேடையேறவுள்ளதும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

இதனிடையே நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய காளியம்மாள், எதுவாக இருந்தாலும் விரைவில் நானே முடிவை அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார். முன்னதாக, காளியம்மாளை பிசிறு என சீமான் விமர்சித்ததாக ஆடியோ வெளியானது. சீமானின் இந்த விமர்சனத்தால் காளியம்மாள் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்பட்டது.

x