கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின்போது வெளிநாடுகளில் இருந்து 7 முறை செல்போன் மூலம் கனகராஜுடன் பேசிய தகவல் பரிமாற்ற விவரங்களைப் பெறுவதற்காக, சிபிசிஐடி போலீஸார், சேலம் நீதிமன்றத்தில் இருந்து சிபிஐ உதவியுடன் இன்டர்போல் போலீஸாருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பி உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீஸார் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. அப்போது, தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகிய இருவரை கைது செய்த போலீஸார், 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தினர். இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், உதகையில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் மற்றும் சயான் ஆகியோர் ஆஜராகினர். சிபிசிஐடி தரப்பில் கூடுதல் துணை ஆணையர் முருகவேல், டிஎஸ்பி அண்ணாதுரை ஆகியோரும், அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோரும் ஆஜராகினர். பின்னர், விசாரணையை மார்ச் 19-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இதுகுறித்து அரசு வழக்கறிஞர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜுடன் வெளிநாட்டில் இருந்து 7 முறை பேசியது யார் என்பதைக் கண்டறிவதற்காக, சிபிசிஐடி போலீஸார் கடந்த ஆண்டு இன்டர்போல் போலீஸாரின் உதவியை நாடினர். ஆனால், இன்டர்போல் போலீஸார் இதுவரை எந்த தகவலும் அளிக்கவில்லை. எனவே, தற்போது சேலம் நீதிமன்றத்தின் மூலம் இன்டர்போல் போலீஸாருக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதம் சிபிஐ மூலமாக, இண்டர்போல் போலீஸாருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதுவரை 245 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்