“மொழிக் கொள்கையில் திமுக உள்நோக்கத்துடன் செயல்படுகிறது” - அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு


அர்ஜூன் சம்பத் | கோப்புப் படம்.

மதுரை: மொழிக் கொள்கையில் திமுக உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் உலக தாய் மொழி தினத்தை ஒட்டி தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''தமிழகத்தில் திமுகவினர், நடிகர் விஜய் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி இருக்கிறது. அரசு பள்ளிகளில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் வந்தால் திமுகவின் கல்வி வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் திட்டமிட்டு மும்மொழி கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள்.

பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை தான் உள்ளது. மொழி கொள்கையில் திமுகவினர் உள்நோக்கத்தோடு செயல்படுகின்றனர். தமிழர்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். மும்மொழி கொள்கை நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை.

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மும்மொழி கொள்கையை ஆதரிக்கின்றனர். தமிழ்நாட்டில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மும்மொழி கல்வி கொள்கையில் இந்தி திணிக்கப்படுவதை உதயநிதி நிரூபிக்க வேண்டும். இரு மொழி கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் ஆங்கிலம் திணிக்கப்படுகிறது.

துணை முதல்வர் உதயநிதி, கெட் அவுட் மோடி என்கிறார். இவ்வாறு சொல்லியதன் மூலம் உதயநிதி அவரது அரசியல் தரத்தை தாழ்த்திக் கொண்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியை தவறாக பேசுகிறார். தற்போது பிரதமர் மோடியை பேசியுள்ளார். திமுக தமிழ்நாட்டில் மட்டும் உள்ள கட்சி. பாஜக நாடு முழுவதும் உள்ள கட்சி. பிரதமர் மோடி உலக மக்களின் தலைவராக உள்ளார். மோடியை கெட்அவுட் என உதயநிதி சொல்லியதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக மட்டும் அல்ல, பாஜக, நாம் தமிழர் கட்சிகளும் எதிர்கட்சிகள் தான். இந்த அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து திமுகவை எதிர்க்க வேண்டும். இதில் என்ன பிரச்சினை உள்ளது. தேர்தல் வரும் போது அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகும். தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக உள்ளது. போதைப் பொருள் புழக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் திமுகவை வீட்டுக்கு அனுப்ப அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும்'' என்று அவர் கூறினார்.

x