புதுச்சேரி: மூன்று மாதங்களாக ஊதியம் தராததால் புதுச்சேரி அமைச்சர் வீட்டை தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட்டனர். முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி தந்தார்.
புதுச்சேரி கிராம பகுதிகளில் உற்பத்தியாகும் குப்பைகளை தனியார் (எச்.ஆர்.ஸ்கொயர்) நிறுவனம் மூலம் சேகரிக்கப்பட்டு குருமாம்பேட் குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் தரவில்லை என குற்றம்சாட்டி, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இன்று சம்பளம் வழங்காததைக் கண்டித்து வில்லியனூரில் உள்ள வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் வீட்டை முற்றுகையிட்டனர்.
பிறகு அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் அவர்களை அழைத்துப் பேசினார். அப்போது தூய்மை பணியாளர்கள், "எங்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. மாதந்தோறும் பி.எப், இஎஸ்ஐ பணம் பிடிக்கின்றனர். ஆனால் உடல் நலக்குறைவால் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்றால் சிகிச்சை அளிப்பதில்லை. குப்பை அள்ள தேவையான கையுறை, முககவசம், கூடை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில்லை" என புகார்களை தெரிவித்தனர்.
இதனை கேட்டறிந்த அமைச்சர், ''முதல்வரை சந்தித்து இதுகுறித்து பேசுகிறேன். சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கிறேன். எனது சொந்த செலவில் கையுறை முககவசம் வழங்குகிறேன்'' என்று உறுதியளித்தார். இதனை ஏற்ற தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.