சென்னை: விழுப்புரம் மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலில் அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துவோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் குறிப்பிட்ட பிரிவினரை தரிசனம் செய்ய அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்னையால் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடர்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கிராம மக்கள் மற்றும் பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோயிலை திறக்க கடந்தாண்டு உத்தரவிட்டது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் கோயில் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளதாகக் கூறி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கார்த்திக்கேயன் ஆஜராகி, திரவுபதி அம்மன் கோயிலி்ல் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை. பூசாரிகள் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவும் தடைபட்டுள்ளது, என்றார்.
போலீஸார் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், ”ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உயர் நீதிமன்ற உத்தரவுப்படி காலை 6 மணி முதல் 7 மணி வரை பூஜைகள் மேற்கொள்வதற்காக மட்டும் கோயில் திறக்கப்படுகிறது, ”என்றார்.
அதையடுத்து நீதிபதி, திரவுபதி அம்மன் கோயிலில் அனைத்து தரப்பினரும் எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துவோர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.