திருப்போரூர் கந்தசுவாமி கோயில் நிலத்தை ஆக்கிரமித்த நபர்கள் ஆஜராக நோட்டீஸ்: பாதிக்கப்பட்டவர்கள் வேதனை


கோப்புப் படம்

திருப்போரூர்: திருப்போரூர், படவேட்டம்மன் கோயில் தெருவில் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு இணை ஆணையர் அலுவலக நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க கோரி, கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் நகரில் பிரசித்திப் பெற்ற கந்தசுவாமி கோயில் அமைந்துள்ளது. அறநிலையத்துறை கட்டு்ப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமாக, திருப்போரூர், காலவாக்கம், கண்ணகப்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 650 ஏக்கரும் அதிகமான நிலங்கள் உள்ளன. இந்நிலையில், மேற்கண்ட நிலங்களை பல்வேறு வகையில் ஆக்கிரமித்து குடியிருப்புகள் அமைத்தும் மற்றும் விளை நிலங்களாக மாற்றி விவசாயம் செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.

இதனிடையே, கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்களை கணக்கெடுப்பு செய்து ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை அகற்றி, நிலத்தை கையப்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில், கந்தசுவாமி கோயில் நிர்வாகம் கோயில் நிலங்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதில், திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட 15வது வார்டு படவேட்டம்மன் கோயில் தெருவில் வசிக்கும் பொதுமக்களின் அனுபவத்தில், விளை நிலங்களை கோயிலுக்கு சொந்தமானது எனக்கூறி சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கந்தசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதில், கந்தசுவாமிக்கு கோயிலுக்கு சொந்தமான சொத்து மற்றும் அதன் சர்வே எண்களை குறிப்பிட்டு, அறநிலையத்துறை சட்டவிதிகளுக்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும். அதனால், அப்பகுதியிலிருந்து ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றி மற்றும் நிலத்ததை கையகப்படுத்தக்கூடாது என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், மேற்கண்ட நிலத்தை ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆக்கிரமிப்பாளர் வரும் மார்ச் மாதம் 4-ம் தேதி அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலக நீதிமன்றத்தில் ஆஜாராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து,படவேட்டம்மன் கோயில் தெருவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் நபர்கள் கூறியதாவது: கடந்த பல ஆண்டுகளாக விளை நிலமாக நாங்கள் பயன்படுத்தி நிலங்களை, கோயில் நிலம் என அறநிலையத்துறை கூறுவது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சளை ஏற்படுதியுள்ளது. மேலும், நாங்கள் வைத்துள்ள நிலங்களை உரிய முறையில் பத்திரப்பதிவு செய்துள்ளோம். ஆனால், கோயிலுக்கு சொந்தமான நிலம் எனக்கூறி நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதனால், எங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

இதுகுறித்து, கோயில் நிர்வாக வட்டாரங்கள் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவின் பேரில், ஆக்கிரமிப்பு நிலங்களை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நோட்டீஸ் பெற்றுள்ள நபர்கள், இணை ஆணையர் அலுவலக நீதிமன்றத்தில் ஆஜராகி உரிய விளக்க அளிக்கலாம். இதையடுத்து, முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றன.

x