தமிழை உலக அளவில் எடுத்துச் செல்ல பிரதமர் உறுதி: முதல்வர் ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்


சென்னை: குறுகிய மனப்பான்மையுடன் புதிய கல்விக் கொள்கையை பார்ப்பது சரியல்ல. தமிழ் மொழி கலாச்சாரத்தை உலக அளவில் எடுத்துச் செல்வதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். தேசிய கல்விக் கொள்கையில் ஒரு மாநிலத்தில் மற்றொரு மொழியை திணிப்பது என்ற கேள்வியே கிடையாது என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை என்று சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

இதனையடுத்து தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்க கோரி முதல்வர் ஸ்டாலின் நேற்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து இப்போது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தர்மேந்திர பிரதான் எழுதிய அந்த கடிதத்தில், ‘ "நமது நாட்டின் கல்வி முறையின் எதிர்காலம் குறித்து ஆழ்ந்த பொறுப்புடன் இந்த கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன். நமது அடுத்த தலைமுறையினரின் தலைவிதியை வடிவமைக்கும் பொறுப்பில் உள்ள தலைவர்கள் என்பதால் இந்த விவகாரத்தில் மாநில அரசு அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை என்பது ஒரு சீர்திருத்தம் மட்டுமல்ல.. இது நமது மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாதுகாத்து வலுப்படுத்தும்.. மேலும், இந்தியாவின் கல்வி முறையை உலகத் தரத்திற்கு உயர்த்தவும் இது உதவுகிறது.

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதம் கூட்டாட்சிக்கு எதிரானதாக உள்ளது. தேசிய கல்விக் குழுவுடன் இணைந்தது தான் சமக்ரா சிக்ஷா திட்டம் ஆகும். கல்வியை அரசியல் ஆக்க வேண்டாம்.

குறுகிய மனப்பான்மையுடன் புதிய கல்விக் கொள்கையை பார்ப்பது சரியல்ல. தமிழ் மொழி கலாச்சாரத்தை உலக அளவில் எடுத்துச் செல்வதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். தேசிய கல்விக் கொள்கையில் ஒரு மாநிலத்தில் மற்றொரு மொழியை திணிப்பது என்ற கேள்வியே கிடையாது.

அரசியல் காரணங்களை விட மாநில அரசு கல்வி மேம்பாட்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சம், இந்தியாவின் மொழிக்கல்விக்கு கொடுக்கப்படும் மதிப்பாகும். மாணவர்களுக்கு அவர்களின் தாய்மொழியில் தரமான கல்வி வழங்குவதை இது உறுதி செய்கிறது. தமிழ் ஒரு அடையாளம் மட்டுமல்ல, அது இந்தியாவின் தேசிய மரபுச் சொத்து என்பதை வலியுறுத்துகிறது.

மொழி திணிப்பு இல்லை, தவறான புரிதலுக்கு இங்கே இடமில்லை. மாநில அரசின் சில தவறான கருத்துக்களை நிவர்த்தி செய்ய விரும்புகிறேன். எந்த மொழியையும் மாநிலங்கள் மீது திணிப்பதற்கான எந்த நோக்கமும் இல்லை. மாணவர்கள் விரும்பும் மொழியில் கல்வி தொடரலாம். இந்திய மொழிகள் மறுக்கப்படாமல், மறுபடியும் புத்துயிர் பெறுவதற்கான ஒரு முயற்சியாக புதிய கல்விக் கொள்கை செயல்படுத்தப்பட்டுள்ளது.

1968-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மொழிக் கொள்கை, தொடர்ந்து வழக்கத்தில் செயல்படுத்தப்படவில்லை என்பதே வரலாற்றுப் பிழையாகும். இந்த பிழையை சரிசெய்வதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் கல்வியில் உரிய இடத்தை வழங்கும் முயற்சி இது. தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை இதுவரை முறையாக நடைமுறைப் படுத்தாதது துரதிர்ஷ்டவசமானது. இதனால் காலப்போக்கில் வெளிநாட்டு மொழிகளை நம்பி இருக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது.

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக நிலவும் அரசியல் எதிர்ப்பு, மாணவர்களை, ஆசிரியர்களை மற்றும் கல்வி நிறுவனங்களை வளர்ச்சியில் இருந்து விலக்குகிறது.

தேசிய கல்விக் கொள்கை என்பது மாநிலங்களுக்கு தங்களது தேவைகளைப் பொறுத்து நடைமுறைப்படுத்த தனி உரிமை அளிக்கிறது. கல்வி வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கும் திட்டங்கள், மாநில அரசின் முன்னேற்றத்திற்கு பயன்படும். பிஎம் ஸ்ரீ பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கையின் சிறந்த உதாரணமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. தேசிய கல்விக் கொள்கை க்கு எதிராக அரசியல் செய்ய வேண்டாம். மாநில அரசு, தேசிய கல்விக் கொள்கையை தவறாக சித்தரித்து, கல்வி முன்னேற்றத்தை பின்தள்ளாதீர்கள்.

இந்த கொள்கை எந்த மொழியையும் திணிக்கவில்லை. பல அரசியல் கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களும் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தி வருகின்றன. இந்த கொள்கை மாணவர்களின் எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு கல்வி மாற்றம். தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கல்வியின் தரம் உயர, தேசிய கல்விக் கொள்கையை நேர்மறையாக அணுகுங்கள்" என தெரிவித்துள்ளார்.

x