மருத்துவ செலவுத் தொகையை கொடுக்காத இன்சூரன்ஸ் நிறுவனம்: ரூ.53,748 வழங்க உத்தரவு


தூத்துக்குடி: மருத்துவ செலவுத் தொகையை வழங்க மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.53,748 வழங்க, தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விளாத்திகுளத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் திருநெல்வேலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கான செலவுத் தொகையைக் கேட்டு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் விண்ணப்பித்தார். ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம் ஒரு பகுதி தொகையை மட்டும் கொடுத்து விட்டு, சரியான காரணங்களைக் கூறாமல் மீதித் தொகையைத் தர மறுத்தது.

மன உளைச்சலுக்கு ஆளான பழனிச்சாமி, தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் வழக்கை விசாரித்து, ‘இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கிய தொகை போக மீதித் தொகையான ரூ.43,748, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.5 ஆயிரம், வழக்கு செலவுத் தொகை ரூ.5 ஆயிரம் என, மொத்தம் ரூ.53,748-ஐ இரு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால், அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

x