தாமதமாக பூ விட்டதால் மா மரங்கள் விளைச்சல் பாதிக்குமா? - அதிகாரிகள் ஊக்கம்


தருமபுரி: மா மரங்கள் தாமதமாக பூத்திருப்பதால் அவற்றின் விளைச்சல் பாதிப்படையாது என தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, தருமபுரி உள்ளிட்ட அனைத்து வட்டங்களிலும் மா சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக மா மரங்கள் டிசம்பர் மாத இறுதியில் தொடங்கி ஜனவரி மாத முதல் பாதி வரையிலான வாரங்களில் பூக்கள் விடும். ஆனால் நடப்பு ஆண்டில் ஜனவரி மாத இறுதியில் தொடங்கி தற்போது வரை மா மரங்களில் பூக்கல் மலர்ந்து வருகின்றன. இவ்வாறு தருணம் கடந்து மா மரங்கள் பூத்துள்ளதால் விளைச்சல் பாதிக்கப்படலாம் என மா விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: மா மரங்களில் பூக்கள் விட வறண்ட கால நிலை அவசியம். ஆனால், நடப்பு ஆண்டில் ஃபெஞ்சல் புயலால் மா மரங்கள் வழக்கமாக பூ விடும் தருணத்திலும் தருமபுரி மாவட்டத்தில் ஈரப்பதமான சூழல் நிலவியது. எனவே, மா மரங்கள் தங்களுக்குரிய கால நிலைக்காக காத்திருந்து உரிய தருணம் வந்ததும் மலரத் தொடங்கியுள்ளன. இதனால் விளைச்சலில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது.

மாறாக, பூ பருவத்தில் தாதுப் பூச்சி போன்ற நோய்த் தாக்கம் ஏற்பட்டால் விளைச்சல் பாதிப்படையும். அதுபோன்ற பாதிப்புக்கு இடம் தராமல் விவசாயிகள் அருகிலுள்ள தோட்டக் கலை அலுவலர்களை அணுகி அவர்களின் வழிகாட்டுதலை பெற்று மா மரங்களை பராமரிக்க வேண்டும். இது தவிர, கோடை மழையின் போது பலத்த காற்று, கனமழை, ஆலங்கட்டி மழை போன்றவை நிலவினால் ஏற்படும் பாதிப்பு எதிர்பாராதது. மற்றபடி தாதமாக பூ விட்டதற்காக விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை, என்றனர்.

x