ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிர்ப்பு: புதுச்சேரியில் முக்கிய கடைவீதிகளில் கடையடைப்பு


புதுச்சேரி: ஆக்கிரமிப்பு அகற்றம் எனக்கோரி அதிகாரிகள் அத்துமீறுவதாக குற்றம் சாட்டி புதுச்சேரியில் நகரப்பகுதிகளில் முக்கிய கடைவீதிகளில் கடைகள் இன்று அடைக்கப்பட்டிருந்தன.

புதுவையில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் விபத்துகளும் அதிகளவில் நடக்கிறது. இதைத்தொடர்ந்து அரசின் உள்ளாட்சி, பொதுப்பணி, காவல்துறை இணைந்து சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. மாதந்தோறும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்வி படேல் சாலையிலிருந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது.. புதுவையின் மைய பகுதியான பாரதி வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.

பாரதி வீதி - அண்ணாசாலை சந்திப்பிலிருந்து போலீஸார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பொக்லைன் இயந்திரம் மூலம் நடைபாதைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். பல இடங்களில் நடைபாதையை ஆக்கிரமித்து வைத்திருந்த படிகள், கட்டிடங்கள், மேற்கூரைகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் அதிகாரிகள் அத்துமீறுவதாக குற்றம் சாட்டி வெள்ளிக்கிழமையன்று நகரப்பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு எடுத்தனர்.

அதையடுத்து இன்று புதுச்சேரி அரசு, பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகளை கண்டித்து நகரப்பகுதி வியாபாரிகள், சமூக அமைப்புகள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர். சாலையோர வியாபாரிகளும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
நகரின் முக்கிய வர்த்தக பகுதியான நேரு வீதி, பாரதிவீதி தொடங்கி பல தெருக்களில் கடைகள் மூடப்பட்டிருந்தன. போராட்டத்தில் பங்கேற்றோர் கூறுகையில், அளவீடு செய்து நோட்டீஸ் அனுப்பி ஆக்கிரமிப்புகளை அகற்றலாம். அதிகாரிகள் அடாவடியாக செய்வதை கண்டித்துதான் போராட்டம் நடத்துகிறோம் என்றனர்.

x