சர்ச்சை பேச்சுக்காக சீமானுக்கு சம்மன்: ஈரோடு போலீஸாரிடம் வழக்கறிஞர் விளக்கம்


ஈரோடு: சர்ச்சையான பேச்சு தொடர்பாக ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சீமான் வழக்கறிஞர் நேரில் சென்று விளக்க கடிதம் கொடுத்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசிய சர்ச்சையான கருத்து தொடர்பாக கருங்கல் பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சென்னையில் சீமான் வீட்டுக்கு சென்று சம்மன் அளித்தனர்.

அதில், பிப்.20ம் தேதி கருங்கல் பாளையம் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டிருந்து. இந்நிலையில் நேற்று சீமான் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரது வக்கீல் நன்மாறன் ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணை அதிகாரி விஜயனிடம், சீமானின் கடிதத்தை வழங்கினார்.

அந்த கடிதத்தில் ஏற்கெனவே தமிழகம் முழுவதும் தொடரப்பட்டுள்ள 70-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒரே இடத்தில் விசாரணை செய்ய வேண்டும் என காவல்துறை இயக்குநரிடம் மனு அளித்திருப்பதாகவும், அந்த மனு மீது முடிவெடுத்து அறிவிக்கும் வரை விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி கோரியிருந்தார். இந்த மனுவை பெற்ற விசாரணை அதிகாரி விஜயன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

x