மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனை முதல்கட்ட கட்டுமானத்தில் 24 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன என்று அதன் முதன்மை இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹனுமந்த ராவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எய்ம்ஸ் கட்டுமான முதல்கட்டப் பணியில் கல்வி வளாகம், வெளி நோயாளர் மருத்துவ சேவைகள், மாணவ , மாணவியர் தங்கும் விடுதிகள், அத்யாவசிய சேவைக் கட்டிடங்கள் போன்ற முக்கிய வசதிகள் அடங்கிய கட்டிடங்கள் இடம் பெறுகின்றன. இப்பணி தொடக்க நாளில் இருந்து 18 மாதங்களுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 2025 நிலவரப்படி முதற்கட்ட கட்டுமானத்தில் 24 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இரண்டாவது கட்டத்தில் மீதமுள்ள உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். முழு கட்டுமானத் திட்டத்தையும் பிப்ரவரி 2027ம் ஆண்டுக்குள் 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதுவரை மொத்த கட்டுமானத்தில் 14.5 சதவீதம் முன்னேற்றம் அடைந்துள்ளது. 900 படுக்கைகளில் 150 படுக்கைகள் பிரத்யேகமாக தொற்று நோய்க்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கல்வி வளாகம், மருத்துவமனை வளாகம், விடுதி வளாகம், குடியிருப்பு வளாகம், விளையாட்டு வசதிகள் மற்றும் 750 இருக்கைகள் கொண்ட கலையரங்கம் ஆகியவை அடங்கி உள்ளன. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணிச் சேர்க்கையும் நடக்கிறது.
ராமநாதபுரத்தில் உள்ள மாநில அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாகச் செயல்படும், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி இவ்வாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் நிரந்தர வளாகத்துக்குள் மாற்ற முயற்சி நடக்கிறது.
மதுரை எய்ம்ஸ் மற்றொரு சுகாதார மையம் மட்டுமல்ல. இது தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்களுக்கு மேம்பட்ட மருத்துவப் பராமரிப்பு, மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் தரமான கல்வி வழங்க வேண்டுமென உறுதிகொண்டுள்ளது, என அதில் குறிப்பிட்டுள்ளார்.