கூத்தாநல்லூர் நகராட்சி திமுக நகர்மன்ற தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வாபஸ்


திருவாரூர்: கூத்தாநல்லூர் நகராட்சியில் திமுக நகர்மன்றத் தலைவருக்கு எதிராக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வாபஸ் பெறப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் மொத்தமுள்ள 24 வார்டுகளில் திமுக 18, காங்கிரஸ் 1, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2, அதிமுக 3 கவுன்சிலர்கள் உள்ளனர். பெரும்பான்மை அடிப்படையில் திமுகவைச் சேர்ந்த பாத்திமா பஷீரா நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், பாத்திமா பஷீரா மீது, திமுக கவுன்சிலர்கள் 16 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நகர்மன்ற துணைத் தலைவர் உட்பட 17 பேர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக் கோரி, கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையருக்கு கடந்த வாரம் கோரிக்கை மனு அளித்தனர். அதை ஏற்று, பிப்.19ம் தேதி நகர்மன்ற கூட்டத்தை கூட்டி, வாக்கெடுப்பு நடத்தப்படும் என, நகராட்சி ஆணையர் கிருத்திகா ஜோதி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இதையடுத்து, திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன், நகர்மன்ற கவுன்சிலர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், பிப்.15ம் தேதி கூத்தாநல்லூர் நகராட்சியில் நகரமன்ற கவுன்சிலர்கள் கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று தாங்கள் வழங்கிய கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனக் கூறி, தங்களது கோரிக்கையை பிப்.18ம் தேதி வாபஸ் பெற்றனர். இதனால், நேற்று முன்தினம் நடைபெற வேண்டிய நகர்மன்ற கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

x